2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆட்சி மாற்றத்துக்கு உதவ வேண்டும்: ஐ.தே.க. அமைப்பாளர்

Thipaan   / 2014 ஒக்டோபர் 04 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார், எம்.எஸ்.நூர்தீன்

நாடும் மக்களும் எதிர்பார்க்கின்ற, இந்த நாட்டிலே இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பிராந்திய ஊடகவியலாளர்கள் உதவ வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமாகிய ரி.ஏ.மாசிலாமணி இன்று(04) தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அதற்கான முன் ஏற்பாடாக, மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சிக் கிளையின் ஏற்பாட்டில்  ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

இந்த நாடும் மக்களும் ஏங்கித் தவிக்கின்ற மாற்றத்தை ஊடகவியலாளர்களாலேயே ஏற்படுத்த முடியும் அதனை ஏற்படுத்த ஊடகங்களும் பிராந்திய ஊடகவியலாளர்களும் முன்வர வேண்டும்.

இந்தியாவிலே இருந்த காந்தி குடும்பம் என்ற நிலையை மாற்றி மோடி அலையை ஏற்படுத்தியது ஊடகங்களும் ஊடகவியலாளர்களுமே ஆகும்.
அவ்வாறே இந்த நாட்டிலே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற அராஜக ஆட்சியையும் ஊழல் நிறைந்த ஆட்சியையும் மாற்ற வேண்டும் என இந்த நாடும் மக்களும் ஏங்குகின்றனர்.

ஊடகவியலாளர்களுக்கு உள்ள அழுத்தமும் பிரச்சினைகளும் எங்களுக்குத் தெரியும் அதற்கும் இடைநடுவில் மாற்றத்துக்கான பணியை செய்ய முன்வர வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்களிலே தோற்பதாகவும் அதற்கு காரணம் தலைமைத்துவமும் கட்சியில் ஏற்பட்ட பிளவும் என்றே கூறப்படுகின்றது.

அதற்கு அப்பால் எங்களது வாக்குகள் கட்டுக் கட்டாக  வெளியே கிடந்தது பற்றி பேசப்படவில்லை, ஊடகங்களும் பேசவில்லை.
இன்று பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. ஆனால், நாட்டிலே வாழ முடியாமல் தற்கொலை செய்கின்ற நிலைதான் அதிகரித்து வருகின்றது.

பொருளாதார வளர்ச்சி அமைச்சர்கள் மட்டத்திலேயே ஏற்பட்டுள்ளது.மக்களால் வாழ முடியாதுள்ளது.

சாப்பாட்டுக்;காக ஒரு தாய் இருபத்தைந்தாயிரம் ரூபாவுக்கு தனது குழந்தையை விற்ற சம்பவமும் இரண்டு குழந்தைகளை தந்தை தன்னால் வளக்க முடியாது உள்ளதாகக் கூறி வீதியிலேயே விட்டு சென்ற சம்பவமும் தனது வறுமையால் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு ஒரு தாய் முயற்சித்த சம்பவமும் அண்மையில் இந்த நாட்டிலே ஏற்பட்டது.

இந் நிலையில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று இந்த அரசாங்கம் எப்படிக் கூறமுடியும் மாறாக அமைச்சர்களின் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டள்ளது என்றால் மறுக்க முடியாது.

விளையாட்டுத்துறை அமைச்சரிடம் அவரது மனைவி ஒரு மாதம் தாபரிப்பு செலவாக 50 இலட்சம் ரூபாய் கேட்டபோது தான் 12இலட்சம் ரூபாய் வழங்குவதாக கூறியுள்ளார்.

அமைச்சருடைய சம்பளம் ஏனைய கொடுப்பனவுகள் எல்லாம் சேர்த்தாலும் இரண்டு அல்லது மூன்று இலட்சம் ரூபாவே கிடைக்கும்; இந் நிலையில் 12 இலட்சம் ரூபாய் அவரால் எப்படி வழங்க முடியும் இதில் இருந்து என்ன தெரிகிறது ஊழல் இடம்பெறுகின்றது என்பது வெளிப்படையாகின்றது.

மக்கள் வாழ முடியாமல் தவிக்கின்றார்கள் அமைச்சர்கள் தாபரிப்புச் செலவாக 12 இலட்சம் ரூபாய் வழங்குகின்றார்கள்.
இவ்வாறுதான இந்த நாடு சென்றுகொண்டிருக்கின்றது. ஒவ்வொரு தேர்தல்களுக்கும் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றது ஆனால், நிறைவேற்றப்படவில்லை.

கடந்த தேர்தலில் மஹிந்த சிந்தனை மூலம் தொழில் இல்லாதவர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. சிறிமாவோ பண்டாரநாயக்கா சந்திரனுக்கச் சென்றாவது அரிசி கொண்டு வருவேன் எனக்கூறினார். கடைசியில் கிடைத்தது.

மரவள்ளிக் கிழங்கு தற்போத மஹிந்த கடலில் இருந்து நீரை வழங்கவேன் என்று கூறியுள்ளார். எல்லாம் தேர்தலுக்காக கூறுவது.
ஆனால், நாங்கள் வாக்குறுதிகளை வழங்கினால் நிறைவேற்றப்படும். இன்று மட்டக்களப்பில் உள்ள குறிப்பிடக் கூடிய அத்தனை அபிவிருத்தித் திட்டங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் உள்ள எந்தச் சொத்தும் எமக்குச் சொந்தமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மாற்றம் வேண்டும். அந்த நிலையில் தேர்தல் வருகின்றது இந் நிலையில் மக்களுக்குத் தேவையான மாற்றத்தை ஏற்படுத்த ஊடகவியலாளர்கள் உதவ வேண்டும் எனத் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையக மட்டக்களப்பு மேற்பார்வையாளர் எம்.எஸ்.அப்துள் கபூர் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் இளைஞர் அணித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X