2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொடர்ச்சியாக தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருக்க வேண்டும்: விநாயகமூர்த்தி முரளிதரன்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்  


கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருக்க வேண்டும். இது தனது நீண்டகால நோக்கம் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட். குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலய பரிசளிப்பு விழா வித்தியாலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (05)  நடைபெற்றது. இதில்; பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

'கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருக்க வேண்டும். இது எனது நீண்டகால நோக்கம். எக்காரணம் கொண்டும் வேறு ஒரு இனத்தவர்; கிழக்கு மாகாணத்தில்  முதலமைச்சராக வருவதற்கு இடமில்லை.  ஆனால், எமது மக்கள் சரியாக மூளையை பயன்படுத்தாமையால், கிழக்கு முதலமைச்சர் பதவி தமிழர்களிடமிருந்து கைநழுவிப் போய்விட்டது. எப்படியிருந்தும் ஒரு தமிழ் அமைச்சர் கூட கிழக்கு மாகாணசபையில் இல்லை.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தனித் தமிழ் தொகுதியாகவுள்ள பட்டிருப்புத்தொகுதியிலேயே எனது சேவைகள் அதிகம் இடம்பெறுகின்றன. இந்தத் தொகுதியை நாங்கள் வளர்த்தெடுக்க வேண்டும். அவ்வாறு வளர்த்தெடுத்தால், கிழக்கு மாகாணத்தையே நாம் ஆளலாம்.

எனக்கும் குருமண்வெளிக் கிராமத்துக்கும் மிக நெருக்கமுள்ளது. ஏனெனில், கடந்த போராட்ட காலத்தில் என்னோடு அதிகமிருந்தவர்கள்;  குருமண்வெளிக் கிராமத்தைச்; சேர்ந்த போராளிகளே. எனக்காக இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலர்  வீரச்சாவை அடைந்தார்கள். அப்படிப்பட்ட வீரத்தை அபிவிருத்திப் பாதையில் திசைதிருப்ப வேண்டும்.

உலகத்தில் முதலாவதாகத் திகழும் நாடுகளெல்லாம் யுத்தம் இடம்பெற்ற நாடுகளாகவே இருக்கின்றன.

இந்த வருட இறுதிக்குள் உங்கள் அனைவருக்கும் குழாய் மூலமான குடிநீர் வழங்கப்படும். அம்பறையிலிருக்கின்ற கீமத்துறுவா, கொண்டவட்டுவான் என்ற இரண்டு குளங்களையும் புனரமைத்து அதிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டு துறைநீலாவணை தொடக்கம் கிரான்குளம்வரைக்கும் இத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது.

அத்தோடு 50,000 மக்களுக்கு இலவசமாக நீர் இணைப்புக்களையும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 95 சதவீதமான மின்சாரத் தேவை பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. 63 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி மின்சாரத் தேவைக்காக செலவிடப்பட்டுள்ளது.

மண்டூர்  - குருமண்வெளி ஓடத்துறைக்கு பாலம் கட்டித்தருவேன். ஆனால் நீங்கள் அனைவரும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெல்லக்கூடிய ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்தீர்களேயானால், இங்கு பாலம் கட்டித்தருவது நிச்சயமாக்கப்படும். 
தற்போது நாங்கள் அரசாங்கத்திலிருப்பது பொற்காலமாகும். எனெனில், பாரிய நிதியைக் கொண்டுவந்து அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். பிரதேச செயலகங்கள் தோறும் கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகின்றது.

அண்மையில் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டம் முன்னேற்றம் கண்டிருக்கின்றது ஆனாலும், பட்டிருப்புக் கல்வி வலயத்தின் பெறுபேறு போதாதுள்ளது. பட்டிருப்பு வலயத்தில் 110 மாணவர்களே இந்தப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள். இதை  அதிகரிக்க வேண்டும். 

எமது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் எந்தவித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. விவசாய விஞ்ஞானத்தை நன்கு கற்றுவிட்டு வருபவருக்கு காணிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஊவாமாகாணசபைத் தேர்தலில் பதுளையிலிருந்த அனைத்து தமிழர்களும் அரசாங்கத்துக்கு வாக்களித்து ஒரு அமைச்சர் பதவியையும்  3 உறுப்பினர்களையும் பெற்றுள்ளார்கள். இதுபோல் எமது மக்களும் வெளிப்படையாகச் சிந்தித்து சாதுரியமாகச் செயற்பட வேண்டும்' என்றார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X