2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

த.தே.கூட்டமைப்பை பிழையாக கூறவில்லை: சாணக்கியன்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 07 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பற்றி தான் பிழையாகக் கூறவில்லை. ஆனால், அவர்கள் உரிமை, உரிமை என்று  கத்துகின்றனர். அவர்கள் உரிமையை பெற்றுக்கொள்ளட்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

அபிவிருத்திகளை தாங்கள் பெற்றுக்கொள்வோம் எனவும் அவர் கூறினார்.

களுவாஞ்சிக்குடி கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான மக்கள் சந்திப்பு, கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ்.விக்னேஸ்வரன் தலைமையில் களுவவாஞ்சிக்குடி வடக்கு பொதுக்கட்டடத்தில் திங்கட்கிழமை (06) மாலை  நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'உரிமை வேண்டும் என்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் செல்லுங்கள். ஆனால், அதன் பின்னர் தண்ணீர் வேண்டும், வீதி அபிவிருத்தி செய்ய வேண்டும் எனக் கேட்டு என்னிடம் வரக்கூடாது.  ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உரிமை, உரிமை என்று கத்தவே தெரியும். மாறாக, அவர்களால் ஒரு மலசலகூடமாவது கட்டமுடியாது.

தமிழ்த்  தேசியக்  கூட்டமைப்பால் கோரப்பட்டுக்கொண்டிருக்கும் தனிநாட்டுக் கோரிக்கை என்பது எதிர்வரும் 50 வருடங்களுக்குள்ளும்; முடியாத காரியமாகும். எனவே, இனிமேலும் உரிமை என்று கத்திக்கொண்டிராமல் அபிவிருத்தியின்பால் செல்வோம்.

பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 5,000 வாக்குகளே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்தன. ஆனால், ஜனநாயகக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு 60,000 வாக்குகள் கிடைத்தன. இப்படி எமது மக்கள் வாக்களித்தும் சரத் பொன்சேகா தோல்வியடைந்தார்.

இந்த நிலையிலிருந்து கொண்டு பட்டிருப்புத்தொகுதி அபிவிருத்திக்காக உதவுங்கள் என்று ஜனாதிபதியிடம் எவ்வாறு நான் கேட்பது.  இப்படியிருந்துகொண்டு எமக்கு இந்த அரசாங்கம் உதவி செய்யவில்லை என்று கேட்பதற்கு எந்த உரிமையும் இல்லை. இவ்வாறு மக்கள் கடந்த காலங்களில் செயற்பட்டுவந்த காரணத்தினாலேயே மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத்தொகுதி இதுவரையில் எந்தவித அபிவிருத்திகளையும் அடையாமலிருக்கின்றது.

கடந்தவைகள் கடந்தவைகளாகவே இருக்கட்டும். தற்போது ஜனாதிபதியின் 'மகநெகும' எனும் திட்டத்தினூடாக பட்டிருப்புத்தொகுதியில் பல வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். இது எமக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாகும். இதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் மக்கள் வழங்க வேண்டும். இந்த வாய்ப்பை கை நழுவவிட்டால் அடுத்த 6 வருடங்களுக்கு எதுவித உதவிகளும் கிடைக்காமல் போகும்.

எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் வரவிருக்கின்றது. பட்டிருப்புத்தொகுதி வாழ் மக்கள் அனைவரும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும். பட்டிருப்புத்தொகுதி மக்களின் வாக்;குகளை பெற்றுத்தருவேன் என்று இங்குள்ள மக்களை நம்பி ஜனாதிபதிக்கு  வாக்கு  கொடுத்துள்ளேன்.

அந்த வகையில் தற்போதிருந்து 'மகநெகும' எனும் திட்டத்தினூடாக பல அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளேன். 20,000 தென்னங்கன்றுகள் பட்டிருப்புத்தொகுதி மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. மேலும்,  பழுதடைந்துள்ள உள்வீதிகள் கிறவல் இட்டு செப்பனிடப்படவுள்ளன. கோழி வளர்ப்புத்திட்டத்தை ஊக்குவித்தல், நண்டு, இறால் வளர்ப்பு போன்ற பல செயற்பாடுகளை மேற்கொண்டு மாதாந்தம் ஆகக்குறைந்தது 5,000 ரூபாய் வருமானம் பெறக்கூடிய அளவுக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.  இந்த அபிவிருத்தித்திட்டங்கள் யாவும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும்.

எப்போதும் எதிர்த்தரப்புக்கு வாக்களித்துப் பழகிய எமது மக்கள், இம்முறை மாத்திரம் ஜனாதிபதிக்காக  இல்லாவிட்டாலும், எனக்காக மட்டுமாவது வரவுள்ள  ஜனாதிபதித் தேர்தலில் எமது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள். எமது மக்கள் சிந்தித்து செயற்படுங்கள். இது எமது மக்களுக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X