2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யுத்தம் காரணமாக உறுகாமம் கிராம முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டனர்: சுபைர்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 07 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


உறுகாமம் கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் கடந்த இரண்டு தசாப்தகால யுத்தத்தின் விளைவாக விரட்டியடிக்கப்பட்டனர் என கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார். 

உறுகாமம் கிராமத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 28 மாணவர்களுக்கான  பாதணிகள் உறுகாமம் சுபைர் ஹாஜியார் வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (07) வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இவ்வாறே தமிழ் மக்களும் இடம்பெயர்ந்திருந்தார்கள். தற்போது இந்த இரண்டு சமூகத்தவர்களும் மீண்டும் ஒன்றிணைந்து வாழக்கூடிய சமாதான சூழல் இங்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த யுத்தத்தின் விளைவாக உறுகாமம் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்களது  கல்வியையும் இழந்துள்ளனர்;. அத்துடன்,  இன ஒற்றுமையும் சீர்குலைக்கப்பட்டது.

நாம் கடந்த 30 வருடங்களாக இழந்த அழியாச் சொத்தான கல்வியையும் இன ஐக்கியத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.  இதுவே இன்றைய முக்கிய தேவையாகும். இன ஒற்றுமையையும் கல்வியையும் மீளப் பெற்றுக்கொடுப்பதற்காக நாம் தமிழ், முஸ்லிம் என்ற பேதமில்லாது இரவு, பகலாகப் பாடுபடுகின்றோம்.

பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள தமிழ், முஸ்லிம் சிறார்களுக்கு எங்கிருந்தேனும் உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதில் நாம் மும்முரமாக ஈடுபடுகின்றோம். அதற்காகவே வெளிநாட்டுக் கொடைவள்ளல்களிடமும் நாம் கையேந்துகின்றோம். அவர்களை உங்கள் பகுதிக்கு அழைத்துவந்து உங்களின் வறுமையை நேரடியாகக் காண்பிக்கின்றோம்.

எம்மையெல்லாம் சின்னா பின்னமாக்கி ஈடுசெய்ய முடியாத இழப்புக்களை ஏற்படுத்திய தமிழ், முஸ்லிம் இன விரோத செயற்பாடுகள் இனியும் நடக்க நாம் அனுமதிக்கக் கூடாது.  இளம் பிஞ்சு உள்ளங்களில் இன ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் அல்கிம்மா நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.எம்.எஸ்.ஹாறூன், அல்கிம்மா நிறுவனத்தின் சவூதி அரேபிய பிரதிநிதிகள்,  அரபு தேச கொடை வள்ளல்கள், உறுகாமம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.எம்.மஹ்ரூப், சுபைர் ஹாஜியார் வித்தியாலய அதிபர் ரீ.எம்.கஸ்ஸாலி, உதவி ஆசிரியர்களான ஏ.எச்.அப்துல் கபூர், ஏ.எஸ்.லாபீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதற்காக கிழக்கு மாகாணசபை முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளருமான எம்.எஸ்.சுபைரின் வேண்டுகோளுக்கிணங்க சவூதி அரேபிய கொடை வள்ளல்கள் அல்கிம்மா நிறுவனத்தினூடாக  நிதி உதவி வழங்கியிருந்தனர்.

இதன்போது, உறுகாமம் கிராம காட்டு வீதிகளில்  பொருத்துவதற்காக சுமார் 60,000 ரூபாய் பெறுமதியான மின்சார மின்குமிழ்களையும் அரபு நாட்டு கொடைவள்ளல்கள் வழங்கினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X