2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'கிழக்கின் மேலதிக ஆசிரிய ஆளணியை சமப்படுத்தும் திட்டம் மாகாண கல்வியமைச்சிடம் இல்லை'

Thipaan   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கின் மேலதிக ஆசிரிய ஆளணியை சமப்படுத்துவதற்கான ஒழுங்கான திட்டம் கிழக்கு மாகாணக் கல்வியமைச்சிடம் இல்லை என கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கம் இன்று (11) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரினால் 2014.10.05ஆம்; திகதிய பத்திரிகை வாரவெளியீடொன்றில் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் சம்பந்தமான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் 323 அதிபர் வெற்றிடம் காணப்டுவதாகவும் 774 ஆசிரியர்கள் கிழக்கில் மேலதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் திருகோணமலை, மூதூர், திருகோணமலை வடக்கு, கல்குடா, மகாஓயா, ஆகிய வலயங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிண்ணியா, கந்தளாய், மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு மத்தி, பட்டிருப்பு, கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அம்பாறை, தெகியத்தகண்டிய, திருக்கோவில் ஆகிய 12 வலயங்களிலும், ஆசிரியர்கள் மேலதிகமாக இருப்பதாகவும், கிழக்கு மாகாணச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த நிலமைக்கு கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயற்பாடே காரணமாகும்.  2013, 2014 ஆம் ஆண்டுக்கான இடமாற்ற சபை, கிழக்கு மாகாணத் திணைக்களத்தின் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளரின் தலைமையில் கூடியபோது, சகல தொழிற் சங்கங்களின் ஒத்தழைப்புடன் தேவை, மேலதிகம் ஆகியவற்றை கவனத்திற் கொண்டு ஒழுங்கான இடமாற்றப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

ஆனால், பிரதேச அரசியல் வாதிகளின் தலையீட்டைத் தொடர்ந்து, இடமாற்றப் பட்டியல் நிராகரிக்கப்பட்டது.

இதுவரையில் இடமாற்றம் அமுல்படுத்தப்படவில்லை. இது சம்பந்தமாக மாகாணக் கல்விப் பணிப்பாளருடனும் கல்வியமைச்சின் செயலாளருடனும் பல தடவைகள் கலந்துரையாடிபோதும், அவர்கள் தங்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆளுனரின் தலையில் தொப்பியை மாட்டினார்களே தவிர, பொறுப்புடன் செயற்படவில்லை.

மேலும், கடந்த காலங்களில் பட்டதாரி ஆசிரிய நியமனம் மற்றும் கல்வியியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறுபவர்களுக்கான ஆசிரியர் நியமனம் என்றெல்லாம் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் கூறியது போன்று, பற்றாக்குறையான வலயங்களுக்கே நியமனம் வழங்கப்பட்டது.
அவை அனைத்தும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள் குறித்த வலயத்தில் கடமையாற்ற வேண்டுமென நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் ஒருவாரம் கூட கடமையாற்றவில்லை.

நியமனம் பெறுவதற்காகவே, பற்றாக்கறையான வலயங்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள். நியமனங்களைப் பெற்றதும், சொந்த இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.

இவ்விடமாற்றங்கள் அனைத்தும், மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோரினாலேயே வழங்கப்பட்டது. 

ஆகவே வலயங்களின் பற்றாக்குறை மேலதிகம் என்னும் நிலமையை உருவாக்கியவர்கள் இவர்களேயாகும்.

இவர்களின் செயற்பாட்டினால் பாதிக்கப்படுவது, அரசியல்வாதிகளின் செல்வாக்கற்ற சாதாரண ஆசிரியர்களாகும்.

திருகோணமலை, பட்டிருப்பு, கல்முனை, சம்மாந்துறை போன்ற வலயங்களில் நியமனத் திகதியிலிருந்து கஷ்ட, அதி கஷ்ட பிரதேசமென்றால் என்னவென்றே தெரியாமல் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இன்றும் சேவையாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள்.

அதேநேரம் 15 வருடங்களுக்கும் மேலாக கஷ்ட, அதிகஷ்ட பிரதேசங்களில் சேவையாற்றிக்கொண்டு, எப்போது நாங்கள் நகரப் பாடசாலைகளுக்கு வருவோம் மென்ற ஏக்கத்தில் இன்றுவரை சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும் காணப்படுகின்றனர்.

தொழிற் சங்கங்களின் ஒத்துழைப்புடன் இவற்றையெல்லாம் சமப்படுத்துவதற்கான திட்டம், கிழக்கு மாகாணக் கல்வியமைச்சில் இல்லை.
அதேநேரம் பிரதேச அரசியல்வாதிகளை சமப்படுத்துவதற்கான திட்டமே உள்ளது. இது வேதனைக்குரியதாகும்.

மேலும் ஆசிரியர்கள் மேலதிகமாகக் காணப்படும் வலயங்களுக்கு இடமாற்றச் சிபாரிசுகள் வழங்கப்படமாட்டாது என கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் குறிப்பிடுவது வேதனைக்குரியது மட்டுமல்ல, மனித உரிமையை மீறும் செயற்பாடுமாகும்.

ஆசிரியர் பற்றாக்குறை ஒவ்வொரு வலயத்திலும் கஷ்ட, அதிகஷ்ட பிரதேசங்களிலேயே காணப்படுகின்றது.

நகரப் பாடசாலைகளில் மேலதிகமாகவே ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.  முதலில் வலயங்களுக்குள்ளேயே சமப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும்.  பின்னர் வலயங்களுக்கு வெளியே சமப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், பெரும்பாலான வலயங்களில் சமப்படுத்தலுக்குப் பதிலாக பழிவாங்கும் செயற்பாடே நிகழ்கின்றது. சில வலயங்களில் கஷ்ட பிரதேசத்தில் சேவையாற்றும் ஆசிரியர்கள் அதிகஷ்டப் பிரதேசத்துக்கு இடமாற்றப்படுகின்றனர்.

இதனை வலயக் கல்விப் பணிப்பாளர்களின் ஆரோக்கியமான செயலாகக் கருத முடியாது.

எடுத்துக்காட்டாக திருகோணமலை வலயத்தில் அதிகஷ்டப் பாடசாலையான திருகோணமலை கல்லம்பற்றை வித்தியாலயத்தில் 5 வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய ஓர் ஆசிரியரை, அதிகஷ்டப் பாடசாலையான திருகோணமலை திரியாய் மகா வித்தியாலயத்துக்கு இடமாற்றம் வழங்கிய சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

கிழக்கு மாகாணத்தில் நீதியான நேர்மையான இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த ஆசிரியத் தொழிற் சங்கங்கள் முன்னிற்கின்றவேளை, வலயக்கல்விப் பணிப்பாளர்கள் அதற்குச் சவாலாக விளங்குகின்றனர்.

ஆசிரியர்களிடத்து சவால் விடுத்தல், பழிவாங்கும் செயற்பாடு, சுயநலம் ஆகிய செயற்பாடுகளில் இருந்து விடுபட்டு, தூரநோக்குச் சிந்தனையுடனும், அர்ப்பணிப்புடனும் சேவையாற்ற வலயக் கல்விப் பணிப்பாளர்கள் முன்வரவேண்டும்.

திருகோணமலை வலயம் எல்லா வலயங்களுக்கும் முன்மாதிரியாக விளங்கிய வலயம். அதற்கு அப்போதய வலயக் கல்விப் பணிப்பாளர் விஜயானந்தமூர்த்தியின் அர்ப்பணிப்பான செயற்பாடு காரணமாக விளங்கியது.

ஆனால், இன்று பின்னோக்கிய வளர்ச்சியில் திருகோணமலை வலயம் செல்வது வேதனையளிக்கின்றது. இந்நிலையைக் கவனத்திற் கொண்டு, அதனைச் சீர்செய்ய கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் உதவ முன்வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X