2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யார் ஆண்டாலும் தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லை: அரியநேத்திரன்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்   


இலங்கையை 'இராமன் ஆண்டாலும் சரி, இராவணன் ஆண்டாலும் சரி' யார் ஆண்டாலும் தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்தமுறையும் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தீர்க்கமான முடிவு எடுக்கும் என்பதுடன்,  எமது முடிவை வட, கிழக்கில் உள்ள  தமிழ் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை தான் பகிரங்கமாக தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். 

இப்போது அரசாங்கத்துக்கு  ஒரு தலையடி வந்திருக்கின்றது. இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலை தீர்மானிக்கின்ற சக்தியாக மாறியிருக்கின்றது என்பது தெரிந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.  

மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர் விவசாயத்திட்டம் கிராமத்தில் சங்காரவேல் சனசமூக நிலையம் ஞாயிற்றுக்கிழமை (12)  திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

'வாசிப்பு கட்டாயமானதாகும். பாடசாலைகளில் சென்று படித்தாலும், மேலும் தேடிப் படிக்கவேண்டிய பல விடயங்கள் உள்ளன. வாசிப்பு ஒரு மனிதனுக்கு இருக்குமாக இருந்தால், எதிர்காலத்தில் பூரணத்துவப்படுத்தப்பட்ட எமது சமூகத்தை  கட்டியெழுப்பலாம்.

அபிவிருத்தி மனித வாழ்வில் பின்னிப்பிணைந்துள்ளது.  இது குடும்பம் முதல் நாடுவரை இடம்பெறவேண்டும். ஆனால், எமது தமிழ்ச் சமூகம் கடந்த 64 வருடகாலமாக சுதந்திரமில்லாத பிரஜைகளாக வாழ்ந்துகொண்டிருக்கின்றது. இந்தச் சுதந்திரத்தை பெறவேண்டும் என்பதற்காக அஹிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் போராட்டங்கள் இடம்பெற்றன.

தற்போது மூன்றாம் கட்டமாக எமது பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஊடாக  எமக்கு ஒரு தீர்வு வரவுள்ளது. இதற்கு எமது மக்கள் அனைவரும் உணர்வாளர்களாக மாறவேண்டும்.

தற்போது கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்துக்காக வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் 10 இலட்சம் ரூபாய் நிதியில்  07 இலட்சம் ரூபாயே வழங்கப்படுகின்றது. மிகுதி 03 இலட்சம் ரூபாய் சுருட்டப்படுகின்றது.

ஆயுதப் போராட்டம் முடிந்தாலும், வடக்கு, கிழக்கு என்பது தமிழர் தாயகமாக இருந்துகொண்டிருக்கின்றது. இந்த வகையில், அபிவிருத்தி தேவையே. ஆனால், அபிவிருத்தி என்பதற்கும் வாக்குரிமை என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. வாக்குரிமை என்பது இன விடுதலையை பெறுவதற்கு பயன்படுத்தவேண்டும். அதற்காக வேண்டி அபிவிருத்தி மாயைக்குள் சென்றுவிடக்கூடாது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எல்லைப் பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில் அத்துமீறி சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றார்கள். அதையும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுத்துநிறுத்தியுள்ளது. முன்னாள் முதலமைச்சரோ, இன்னாள் பிரதியமைச்சரோ இதைத் தட்டிக்கேட்கவில்லை. நாங்கள் நீதிமன்றம்வரை சென்றுள்ளோம். எமது நிலத்தை தக்கவைக்கும்பொழுதே அடுத்த நகர்வாக எமது பணியை மேற்கொள்ளமுடியும்.

எமது மக்கள் கடந்;த யுத்தத்தால் இன்று அங்கவீனர்களாகவும் அநாதைகளாகவும் விதவைகளாகவும் இருக்கும் இவ்வேளையில், படுவான்கரைப் பிரதேசத்தில் மாத்திரம் 2,000 இற்கும்  மேற்பட்ட மாவீரர்களையும் இழந்திருக்கின்றார்கள். இது வரலாறாகும். இந்த வரலாற்றை இப்படியே விட்டுவிடமுடியாது. இது பற்றி நன்கு ஆராயப்பட வேண்டும். இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச ரீதியில் சமாதானத்தின் ஊடாக மேற்கொண்டு வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த தேர்தலை இலக்கு வைத்து வாக்குகளை கேட்பது அல்ல. எமது அடுத்த சந்ததியினர் வாழவேண்டும் என்பதை இலக்கு வைத்தே வாக்குகளைக் கேட்போம்.

அரியநேத்திரன் தேர்தலில் போட்டியிடுவார்; அல்லது போட்டியிடாமல் விடுவார். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடும்.  அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரம் வாக்களித்தாலே எமது பணிகளை  முன்னெடுத்துச் செல்ல முடியும். இருந்தாலும், கடந்த யுத்தத்தில் பலதை நாம் இழந்திருந்தாலும், கல்வியையும் உணர்வையும் எமது சமூகம் இழக்கவில்லை.

அரசியல், அபிவிருத்தி, மனிதவாழ்வு என்பன பின்னிப்பிணைந்துள்ளன.  இன்னும் சில காலங்களில் தேர்தல் இலங்கையில் வர இருக்கின்றது. அது ஜனாதிபதித் தேர்தல் என்று பலர் கூறுகின்றார்கள். இந்தத் தேர்தலில் எமது தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை  தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்கும்' என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர் விவசாயத்திட்டக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) புதிதாக திறந்துவைக்கப்பட்ட  சங்காரவேல் சனசமூக நிலையத்துக்கு  100,000  ரூபாய் பெறுமதியான புத்தகங்களும் 100,000 ருபாய்  பெறுமதியான தளபாடங்களும் ஞாயிற்றுக்கிழமை (12) வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின்; முன்னாள் மேலதிக அரசாங்க அதிபாராக இருந்து அமரத்துவம் அடைந்த பூ.சங்காரவேலின் ஞாபகார்த்தமாக லண்டனில் வசிக்கும் அன்னாரது  மகனான சங்காரவேல் சுகுமார் இவற்றை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X