2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மூன்றாவது முறையும் ஜனாதிபதியாகலாம் என்ற அந்தஸ்தை நாங்கள் கொடுத்தோம்: நஸீர் அஹமட்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'நாங்கள்தான்,  இன்றிருக்கின்ற இந்த ஜனாதிபதிக்கு நீங்கள் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி ஆகலாம் என்ற அந்தஸ்தை கொடுத்தோம்.'
இவ்வாறு கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர்  அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (12)  நடைபெற்ற  பாராட்டு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'18ஆவது அரசியல் திருத்தத்தின் மூலம் இன்றிருக்கின்ற ஜனாதிபதி மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வரலாம் என்ற திருத்தத்துக்கு ஆதரவாக கை தூக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கும் பாரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்;டதாலேயே, அவ்வாறான ஆதரவை வழங்குமொரு சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம்.

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரியில் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், முஸ்லிம் சமூகம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில்; இருக்கின்றது.

கடந்த இரண்டரை வருடங்களாக இந்த நாட்டில் குறிப்பாக பெரும்பான்மையினரின் பகுதிகளுக்குள் வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை நாம் அறிவோம். இந்த வேளையில், முஸ்லிம் சமூகம் எவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கப்போகி;ன்றது என்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் மாத்திரமல்ல, நாட்டில் வாழ்கின்ற ஏனைய சமூகங்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் அதனுடைய தீர்மானத்தை எவ்வாறு எடுக்கப்போகின்றது என்று அரசியல் மட்டங்களிலும் அலசப்படுகின்றது. அரசியல் கட்சிகள், முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை அணுகி கட்சியின் நிலைப்பாடு என்ன என்று கேட்டு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம்களுடைய அபிலாஷை ஒருபுறம், இதனை முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு காப்பாற்றப்போகின்றது என்கின்ற தீர்மானத்தை எடுக்கின்ற இந்தக் காலகட்டத்தில்,  முஸ்லிம் காங்கிரஸ் சந்திக்கக்கூடிய அழுத்தங்களைப் பற்றியும் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.

2012ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தல் வந்தபோது, முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலை எவ்வாறு முகங்கொடுப்பது என்று சிந்தித்திருந்த வேளையில், பல அழுத்தங்களை சந்தித்தது.

ஒருபுறம் அரசின் பங்காளியாக அரசின் நீதியமைச்சராக இருந்துகொண்டு கட்சிக்குள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் இருந்து பல அழுத்தங்களைச் சந்தித்தது.

ஐக்கிய முன்னணி அரசாங்கக்கட்சியுடன்தான் ஒட்டிக்கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கடைசி 24 மணித்தியாலங்கள் வரைக்கும் அரசு அழுத்தம் கொடுத்தது. இருந்தபோதிலும், இந்த அழுத்தங்களுக்கு பயந்துவிடாமல் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தெளிவான முடிவை எடுத்தது.

அரசின் பொறுப்புவாய்ந்த நீதியமைச்சுப் பொறுப்பைச் சுமந்துகொண்டு அரசாங்கக்கட்சியுடன் சேராமல் தனித்துப் போட்டியிடுவது என்பது பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்கின்ற விடயமாகும்.  இருந்தாலும், அந்தச் சவால்களுக்கு எல்லாம் அஞ்சவில்லை. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில்தான் இத்தகையதொரு சவாலை எதிர்கொள்ளும் முடிவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் வந்தது.

18ஆவது அரசியல் சட்டத்திருத்தத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் விரும்பிப்போகவில்லை என்பதை நாடே அறியும்.

இந்த நாட்டின் ஜனாதிபதி 3ஆவது முறையாகவும்; ஜனாதிபதியாக வரலாம் என்று அங்கிகாரமளித்தவர்கள் முஸ்லிம்கள் என்பதை இந்த நாடு இலேசில் மறந்துவிட முடியாது.

அதற்கான முன்னேற்பாடான 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கை தூக்கியிருக்காவிட்டால், முஸ்லிம் காங்கிரஸ் இழைத்த பாரிய  துரோகமான முடிவு என்று நான் பகிரங்கமாகக் கூறுகின்றேன்.

18ஆவது சட்டத்திருத்தத்துக்கு  நாங்கள் ஆதரவு என்று கை தூக்கியதன் காரணமாகத்தான் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு நடந்த அத்தனை துரோகங்களும் இழைக்கப்பட்டன என்பதை முஸ்லிம் காங்கிரஸும் முஸ்லிம் சமூகமும் மறந்துவிட முடியாது.

நாங்கள் கிழக்கு மாகாணசபையில் எடுத்த தீர்மானம் இந்த நாட்டினுடைய ஒரு மாகாணசபையைத் தீர்மானிக்கின்ற சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் மிளிர்கின்றது என்பதைப் பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.

இது அரசுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கின்றது.

இந்த நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கின்ற ஈனத்தனமான, காட்டுமிராண்டித்தனமான, காடைத்தனமான அட்டூழியங்கள் அரசாங்கத்துக்குத் தெரியாமல் ஒருபோதும் நடந்து விடவில்லை.
பெரிய புலனாய்வு வலையமைப்பை வைத்துக்கொண்டு பயங்கரவாதத்தை அடக்கமுடிந்த அரசாங்கத்தின் முக்கிய புள்ளியாக இருக்கின்ற பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, முஸ்லிம்களுக்கு எதிராக பகிரங்கமாக நடத்தப்பட்ட அந்த அநியாயங்கள் அவருக்குத் தெரியாமல் நடந்திருக்கின்றது என்று சொன்னால் அது ஒரு கேலிக்கூத்து.

இவ்வாறான ஒரு காலகட்டத்தில் மாகாணசபையை நாங்கள் மாற்றி ஆட்சியையும் மாற்றிவிடுவோம் என்கின்ற அச்சம் இந்த அரசுக்கு இருந்தது.
சர்வதேச ரீதியில் ஜனாதிபதிக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் என்றும் மற்றும் இதர அமைப்புக்களிடமிருந்தும்  அழுத்தங்கள் வந்துகொண்டிருந்த தருவாயில் மனித உரிமை மீறல் என்ற அந்த தூக்குக்கயிறு தொங்கிக்கொண்டிருக்கின்ற வேளையில், அரசாங்கத்தின் பல நபர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை வைத்து மனித உரிமை மீறல் என்கின்ற விடயங்கள் முன்வைக்கப்படுகின்ற இவ்வேளையில் கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுவதாகவோ அல்லது ஆட்சி மாற்றப்படுவதாகவோ இருந்தால், அது ஒரு பாரிய அரசியல் பின்னடைவை இந்த அரசாங்கத்துக்கு கொடுக்கும்.

இந்த சூழ்நிலையில்தான் இப்பொழுது ஜனாதிபதித் தேர்தல் வருகின்றது.

அழுத்தங்கள் பலவிதமாக முஸ்லிம் காங்கிரஸுக்கு வந்துகொண்டிருக்கின்ற வேளையிலே முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கப்போகின்றது.

ஒருபுறம் இந்த நாட்டினுடைய பலம் மிக்க ஜனாதிபதி, மீண்டும் தேர்தலில் வெல்லுவார் என்கின்ற வாய்ப்பை இன்றுவரை பெற்றிருக்கின்ற ஜனாதிபதி, அவருக்கிருக்கின்ற அரசியல் அதிகாரம்,  மறுபுறம் ஊவா மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்பு பலூனை ஊதி வெடிக்கச் செய்த மகிழ்ச்சி போன்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில்  விக்கிரமசிங்ஹ இந்த நாட்டின் அதிகாரத்தை மீண்டும் பெற்றுவிட்டார் என்ற தோரணையில் கருத்துக்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்ற வேளையிலே முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்யப்போகின்றது என்பதுதான் இன்றிருக்கின்ற கேள்வி.

எந்த அழுத்தங்கள், குழப்பங்கள், எதிர்வுகூறல்கள் இருந்தாலும், முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுப்பதில் தெட்டத்தெளிவாக இருக்கின்றது.
இந்த முடிவு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலையைக் காப்பாற்றுகின்ற முடிவாக இருக்கும்.

இது ஜனாதிபதியையோ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவையோ காப்பாற்றுகின்ற முடிவாக ஒருபோதும் இருக்காது.
இதில் யாரும் குழப்;பமடையத் தேவையில்லை.

முஸ்லிம்களுடைய பாதுகாப்பை, உரிமையை உறுதிப்படுத்துகின்றதான உத்தரவாதத்தோடு கூடிய நிலைப்பாட்டில் யார் இருக்கின்றார்களோ அது பற்றித்தான் முஸ்லிம் காங்கிரஸ் தீவிர கவனம் எடுக்கும்.

இந்த எல்லா விடயங்களையும் கருத்திற்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கப்போகின்ற முடிவு சிலவேளை ஒரு அதிரடி நிலைப்பாடாகக் கூட இருக்கலாம்.

அது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியும் விடலாம்.

அச்சுறுத்தல்களுக்குப் பயந்து முஸ்லிம் காங்கிரஸ் எந்த முடிவுக்கும் வரலாம் என்று யாராவது நினைத்துக்கொண்டிருந்தால் அது பகற் கனவாகவே இருக்கும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X