2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அடுத்த ஜனாதிபதி யார்?; ஆருடம் கூறினார் கருணா

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்   


தமிழ் மக்களோ, முஸ்லிம் மக்களோ வாக்களிக்காவிட்டாலும், நிட்சயம் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷவே மீண்டும் ஜனாதிபதியாக வருவார் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 

ஏனெனில், 90 சதவீதமான சிங்கள மக்கள் அவர் பக்கமே  நிற்கின்றார்கள் எனவும் அவர் கூறினார்.

போரதீவுப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட 27 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம்; 27 இலட்சம் ரூபாய்  நிதி  அந்தப் பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு  கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'ஜனாதிபதித் தேர்தலில் சிங்களவர் ஒருவரே ஜனாதிபதியாக வருவார். அவர் எமது மாமாவோ, சொந்தக்காரராகவோ இருக்கமாட்டார். இந்த நிலையில்,  வெல்லக்கூடியவருக்கு வாக்களிக்கவேண்டும்.

தோல்வி அடையும் வேட்பாளருக்கு வாக்களித்து,  வாக்களித்து பழகிய எமது மக்கள், இனிமேலும் தோல்வி அடைபவருக்கு வாக்களிக்கும் எண்ணமிருந்தால் வாக்குச்சாவடிக்கே போகாமல் இருக்கலாம்.

யுத்தத்தை நிறுத்தியது எமது மக்கள் சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கே. வெறுமனே பயத்தில் யுத்தத்தை நிறுத்தவில்லை. ஆனால், பலர் சொல்வது கருணா அம்மான் துரோகம் இழைத்துவிட்டார். விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார் என்று.

யாழ்ப்பாணத்தில் இருந்தவர்கள் பயந்து எலியாய் பொந்தினுள் பூரும்போது நாங்கள் போய்த்தான்; அவர்களை புலியாக்கினோம். அப்போது, இராணுவத்தின் வசமிருந்த அந்தப் பெரிய ஆனையிறவை இரண்டு நாட்களில் எம் வசமாக்கிப் பிடித்தேன். எனவே, பயத்தில் நான் யுத்தத்தை நிறுத்தவில்லை. எமது மக்கள் உயிர் வாழவேண்டும் என்பதற்காகவே  யுத்தத்தை நிறுத்தினேன்.

நாடு தற்போது எந்தவித பிரச்சினைகளும் இல்லாது, அபிவிருத்திப் பாதையை நோக்கிப் பயணிக்கின்றது.  24 வருடங்களின் பின்னர்  யாழ்தேவி ரயில் செல்வது போன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய அபிவிருத்திகள் இன்னும் மென்மேலும் வருவதற்காக காத்திருக்கன்றன.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மாவட்டத்திலுள்ள பெண்கள் அமைப்புகளை கட்டியெழுப்பவேண்டும். இந்த அடிப்படையிலேயே எனது விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த நிதி வழங்கப்படுகின்றது.  எந்த நாட்டிலும் எந்தப் பிரதேசத்திலுமாவது யுத்தத்தின்போது வரும் தாக்கங்கள் மற்றும் வீட்டுச்சுமைகள் அனைத்தையும் தாங்குவது பெண்களே. யுத்தம் எமது பெண்கள் மத்தியிலும் மனத்தாக்கங்கள், ஏக்கங்கள் என பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது.  இவை அனைத்திலுமிருந்து எமது பெண்கள் விடுபட்டு விழிப்படைந்து கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றமடைய வேண்டும்.

கட்டுமானங்கள் மாத்திரம் போதுமானது அல்ல. மக்களின் வாழ்வாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படவேண்டும். அப்போதே  அபிவிருத்தியை எட்டமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கடந்த 6 வருடங்களில் மின்சாரத்துக்காக மாத்திரம் 63,000 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. படுவான்கரைப் பிரதேசத்தின் மின்சாரத் தேவை  95 சதவீதம் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. அதுபோல் குழாய் மூலமான குடிநீர்த்திட்டமும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்துகொண்டு மக்களுக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை தற்போது செய்து காட்டிவருகின்றேன். எமது மக்களின் வறுமையை இல்லாமல் செய்யவேண்டும். இதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

அரசியல்வாதி என்று கொண்டு மக்களை திசை திருப்பும் வகையில், உணர்ச்சி வசப்பட்டு பேசுவதில் எந்தவிதப் பிரயோசனமும் இல்லை. மக்களுக்கு சேவை செய்ய அரசியலை பயன்படுத்தவேண்டும். அதை விடுத்து, ஊடகங்களில் அறிக்கை விடுவது மாத்திரம் அரசியல் அல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வந்து கதைப்பார்கள், கத்துவார்கள், சத்தமிடுவார்கள். ஆனால்,  எமது மக்களின் எதிர்காலம் பற்றி அவர்கள் சிந்திக்கமாட்டார்கள். அவர்கள் சிறிய விடயத்திலும் அரசியல் இலாபம் தேடவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவ்வாறு வியாக்கியானம் பேசுவதில் என்ன பயன்.

நடந்து முடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் அங்குள்ள அனைத்து தமிழ் மக்களும் அரசாங்கத்துக்;கு வாக்களித்து 4 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதுபோல்,  படுவான்கரையில் அமைந்துள்ள பட்டிப்பளை மற்றும் வெல்லாவெளிப் பிரதேசங்களிலும் நினைத்தால் ஒரு அமைச்சுப் பதவியை பெறலாம். ஆனால், தற்போதைய கிழக்கு மாகாணசபையில் எந்த அமைச்சரும் இல்லை.

அங்கு, முதலமைச்சராக இருக்கவேண்டியவர் ஒரு தமிழர். தற்போது வேறு யாரோ இருக்கின்றார். நிலைமை இவ்வாறே  இருக்கின்றது. இதை  எமது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். இவை அனைத்தும் எமது மக்கள் எதிர்த்து வாக்களித்ததால் வந்தவையாகும்.

இந்தமுறை கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்ட 300 நியமனங்களில் 36 பேர் மாத்திரமே தமிழர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள். ஏனைய 264 பேரும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதையாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தட்டிக்கேட்கவில்லை.  கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருந்திருந்தால்,  இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இந்த விடயங்கள் பற்றி எமது மக்கள் தேர்தல் காலங்களில் சிந்திக்கவேண்டும்.

ஜனநாயகக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கச் சொன்ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வார்த்தையை கேட்டு, எமது மக்களும் வாக்களித்தார்கள். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உணர்வு எங்கே போனது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X