2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நான் செய்த அபிவிருத்திகளை விட, எனது அரசியல் வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகின்றேன்: பஷீர்

Gavitha   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


நான் செய்த அபிவிருத்திகளை விட, எனது அரசியல் வாழ்க்கையில் இன்றும் மகிழ்ச்சியடைவது, தலைநிமிர்ந்து இருப்பது, இரண்டாயிரமாம் ஆண்டு தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் மரணித்த பின்னர், இந்தக் கட்சியை புல்லுருவிகளிடமிருந்தும் கோடரிக் காம்புகளிடமிருந்தும் சமுதாயத்தை அழிக்க வந்த நயவஞ்சகர்களிடமிருந்து காப்பாற்றினேன் என  உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின், மீராகேணி பஷீர் சேகுதாவூத் பொதுவாசிகசாலைக் கட்டடத்தின் தொடர் வேலைக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை (18) இடம்பெற்றது.

இதற்கு அமைச்சரின் ஒரு மில்லியன் ரூபாய் பொதுவாசிகசாலைக் கட்டட நிதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தலைவர் அஸ்ரபின் மரணத்துக்குப் பின்னர் இந்தக் கட்சியைப் பலர் அழிக்க வந்தார்கள். அவர்களை வலுவாக எதிர்த்து நின்று, நான் காப்பாற்றியது தான் நான் செய்த சேவைகளில் மிகப் பெரிய பெறுமதி மிக்கதுமான சேவை.
இதனைப் பற்றி பேச யார் எந்த உயர் பீடத்தில், எந்தப் பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் எங்கேயானாலும் என்னோடு விவாதத்துக்கு வரலாம். நான் ஆதாரங்களுடன் நிரூபிப்பேன். நான் கட்டடங்கள் கட்டியது, அபிவிருத்தி செய்தது, உதவி செய்தது, வேலைவாய்ப்பு வழங்கியது எல்லாம் ஒரு பொருட்டல்ல.

இந்தக் கட்சிக்கு வழக்குகள் வந்தபோது, தலைமைத்துவத்துவத்துக்கு அவதூறுகள் நேர்ந்தபோது, முஸ்லிம் காங்கிரஸை தேர்தல் காலங்களில் கவிழ்க்க முனைந்தபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீடத்தைக் கூட்டி அந்தக் கட்சியைக் கவிழ்க்க முனைந்தபோது என்று எல்லா வேளைகளிலும் நான் தலைநிமிர்ந்து தலைகொடுத்தார்.

2000ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டு வரை பல சவால்களை எதிர்கொண்டு இந்தக் கட்சியைப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றியிருக்கின்றேன்.

என்னுடைய அரசியல் வாழ்க்கையில் இரண்டு சிறுபான்மை இனங்களோடும் இரண்டறக் கலந்து, அவர்களது தேசிய அரசியலுக்காகவும் உரிமைகளுக்காகவும் கணிசமான பங்களிப்பைச் செய்திருப்பதால், இன்று நான் பெருமையடைகின்றேன்.

நான் அபிவிருத்திகளைக் காட்டிப் பிரசாரம் செய்து, என்னை அரசியல் ரீதியாக நிலைநிறுத்திக் கொள்ள என்றும் விரும்பியதில்லை. முஸ்லிம் தமிழ் சமூகத்தினதும் அரசியல் உரிமைகளைப் பெறுவதில் ஒரு திறந்த கோரிக்கையாளனாக, ஒரு போராளியாக என்னை உருவாக்கிக் கொண்டவன்.

அபிவிருத்திகளைப் பட்டியல்போட்டுச் சொன்னால் நான் கொக்கரிக்காமல் செய்த அபிவிருத்தியில், 10 வீதத்தைத்தையேனும் மற்றவர்கள் செய்யவில்லை என்று உரத்துக் கூறுவேன்.

ஆனால், அப்படிப் பிரசாரம் செய்து எனக்குப் பழக்கமில்லை. இன்றைய காலகட்டத்தின் அரசியல் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. அடுத்த ஏழு வருடத்துக்கான அரசியலில் சிறுபான்மைச் சமூகங்கள் எவ்வாறு பங்கு பெறுவது என்பதில்தான் நான் அக்கறையாக இருக்கின்றேன்.

எல்லாம் முடிவுக்கு வருகின்ற போது, பிடுங்குவது இலாபம் என்று நான் சிறுபான்மை மக்களின் அரசியலைப் பார்க்கவில்லை. எனது அரசியல் பிழைப்புக்காக மடியேந்துகின்ற சின்னத்தனமான அரசியலைச் செய்ய நான் விரும்பியதில்லை.

இதன் பின்பு அடுத்து வருகின்ற ஏழாண்டு காலத்தில் இலங்கையிலே வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் அரசியல் தலைவிதியை சரியாகச் செய்து விட்,டு ஓய்வு பெறுகின்ற சரியான வியூகத்தை வகுக்கும் உன்னதமான பணியைத்தான் நான் செய்ய விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X