2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தமிழர்களுக்காக த.தே.கூ, ஐ.தே.க. எம்.பி. க்கள் கதைக்கவில்லை: நிஷாந்த

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்


தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ இதுவரையில் நாடாளுமன்றத்தில் கதைக்கவில்லை என, சிறு ஏற்றுமதி பயிர்  ஊக்குவிப்பு பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்தார்.

இது பற்றிக் கதைப்பதற்கு  அவர்கள் கை தூக்கியதுமில்லை. இவர்கள் வரவு - செலவுத்திட்டத்திலும் கூட எதிர்த்தே வாக்களிப்பார்கள் எனவும் அவர் கூறினார்.

பட்டிருப்புத்தொகுதியின் அபிவிருத்திக் கூட்டம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் ஏற்பாட்டில், களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை நடைபெற்றது.   இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'2009ஆம் ஆண்டுக்கு முன்னர் மட்டக்களப்புக்கு வருவதற்கு எமக்கு மிகப் பயமாக இருந்தது. எப்போது குண்டு வெடிக்குமோ, எமது உயிருக்கு ஆபத்து வருமோ என்ற பயம்  இருந்தது. அதனால்,  அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களோ, ஏனைய விடயங்கள் பற்றியோ கதைக்கமுடியாத சூழல் காணப்பட்டது.

தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  வழிகாட்டலால், பாரிய அபிவிருத்திகளையும் ஏனைய செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடிகின்றது. அபிவிருத்திகளை இன்னும் மேலோங்கச் செய்வதற்கு, தற்போதைய ஜனாதிபதியை மீண்டும் தெரிவுசெய்தால், பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்கமுடியும்.

மேலும், என்னுடைய அமைச்சின் கீழ் பல சிறு ஏற்றுமதிப்பொருட்கள் இருக்கின்றன. இதில் அடங்கியுள்ள அனைத்துப் பொருட்களும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு  பொருந்தாது. வெற்றிலை, பாக்கு போன்றவற்றையே  மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தி செய்யலாம்.  இந்த உற்பத்திகளை மேற்கொள்வதற்கு நாம் சகல உதவிகளையும் வழங்குவோம்.

ஜனாதிபதியால் எனக்கு தரப்பட்டுள்ள பொறுப்பு என்னவெனில், இலங்கையிலுள்ள சிறு ஏற்றுமதிப் பொருட்களை வளர்த்து,  நாடு ழுமுவதிலும் பரப்பி, சிறு ஏற்றுமதிப் பயிர்களின் மூலம்  மக்களுக்கு வருமானம் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதே. 

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சிறு ஏற்றுமதிப் பயிர்களை மேற்கொள்ளவும் இவற்றுக்குரிய காரியாலயங்களை திறக்கவும் கஷ்டமான சூழல் காணப்பட்டது. ஆனால், தற்போது இந்த இரு  மாவட்டங்களிலும் எமது அமைச்சின் ஊடான செயற்பாடுகள் அடுத்த வாரத்திலிருந்து விரைவுபடுத்தப்படவுள்ளன.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,000 ஏக்கர் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மேலும் 36,000 ஏக்கர் மரமுந்திரிகை செய்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

எதிர்காலத்தில் இங்குள்ள நிலங்களில் மரமுந்திரிகையை  சிறியளவிலோ, பெரியளவிலோ செய்கை பண்ணுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை தொடர்புகொண்டு, இவற்றுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

இதற்காக மரமுந்திரிகைக்கன்றுகள், பசளை, நிதியுதவி அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மிக விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகைச் செய்கையை விரைவுபடுத்தவுள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் சாணக்கியனை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது மகநெகும திட்டத்தின் ஊடாக பட்டிருப்புத்தொகுதியில் வீதி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், இவ்வாறான பல அபிவிருத்திகள் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X