2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'திட்டத்தை த.தே.கூ. ஆதரிக்காவிடின் துரோகம்'

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல் 

நிவாரணங்கள் நிறைந்த இந்த வரவு -செலவுத்திட்டத்தை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்காவிட்டால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி  தமிழ் தேசியக் கூட்டமைப்பு கதைப்பதுபோன்று, அந்த  மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய கடப்பாடும் அவர்களுக்கு உண்டு எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) சமர்ப்பிக்கப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, களுவாஞ்சிக்குடி குமரன் கலாமன்ற வீதியில் பட்டாசு கொழுத்தி சனிக்கிழமை (25) ஆரவாரிக்கப்பட்டது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

'ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரவு –செலவுத்திட்டமானது, எனது  பார்வையில் அபிவிருத்தியை நோக்கிச் செல்லக்கூடியதாக காணப்படுகிறது. 10 சதவீதம் தண்ணீர் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல திட்டங்கள்  உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனால், மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.

நாட்டின் பல பாகங்களிலும் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த  நிலையில், இந்த வரவு -செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதானது நாட்டில் மேலும் பல முன்னேற்றங்களை கொண்டுவரும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்வரும் மாதங்களில் தேர்தல்கள் வந்தாலும் வராவிட்டாலும் இந்த வரவு -செலவுத்திட்டம் நாட்டின் அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல பாகங்களிலும் குறிப்பாக கிழக்கில் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டன. கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வரவு -செலவுத்திட்டங்கள் உட்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளன. இந்தமுறை வரவு -செலவுத்திட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது

என்னைப் பெறுத்தவரையில் தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால், தமிழ் மக்களுக்கு வரும் சலுகைகளை நாங்கள் தடுக்கக்கூடாது. தற்போது இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களோ, மாகாணசபை உறுப்பினர்களோ மக்களின் தேவைகளை பூர்த்திசெய்து கொடுக்காத காரணத்தால், மக்கள் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு என்னிடம் வருகின்றனர்;' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X