2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யானைகளின் தாக்குதல்களால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு நிதி

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம்  யானைகளின் தாக்குதல்களால்  பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி  நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்துக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அனுப்பிவைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

இது தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கடந்த ஆண்டு 2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் யானைகளால் பாதிக்கப்பட்ட பிரதேச செயலகத்துக்கு தலா  10  இலட்சம் ரூபாய் படி  ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 பிரதேச செயலகங்களுக்கு 80 இலட்சம் ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதி இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்த நிதி யானைகளால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தொடர்பில் கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதிலும், இந்த நிதி அனுப்பிவைக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த வாரம் நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தில் இது தொடர்பில் கடுமையான எமது ஆட்சேபனையை தெரிவித்தேன்.

இதற்கு பதிலளித்த வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அந்த நிதியை தமது அமைச்சு கையாள்வதில்லை எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூலமே அந்த நிதி அனுப்பிவைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அத்துடன், அது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்புகொண்டு நிதியை உடனடியாக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, இந்த நிதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது எனக் கூறினார்.

கோரளைப்பற்று, கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று தெற்கு, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர்பற்று, போரதீவுப்பற்று உள்ளிட்ட 07 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை இவ்வருடத்தில் 09 பேர் யானைகளின் தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர்.

2014ஆம் ஆண்டு கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஒருவரும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 03பேரும் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒருவரும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 03 பேரும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

2010ஆம் ஆண்டு 3 பேரும் 2011ஆம் ஆண்டு 05 பேரும் 2012ஆம் ஆண்டு 03 பேரும் 2013ஆம் ஆண்டு 09 பேரும் உயிரிழந்தனர்.  அத்துடன்,  இவர்களுக்கான நஷ்டஈடு வழங்கப்பட்டதாக மாவட்ட செயலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவ்வருடத்தில் மொத்தமாக வீடுகள் பாதிப்பு, பயிர் அழிவு, தொழில் அழிவு, காயமடைந்தவர்கள் என 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் அழிந்தமை முழுச்சேதம், பகுதிச்சேதம் என அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X