2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மக்கள் பார்வையாளர்களாக அன்றி பங்காளிகளாக மாறவேண்டும்: சுபாஸி

Gavitha   / 2014 நவம்பர் 08 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மக்கள் பார்வையாளர்களாக அன்றி பங்காளிகளாக மாறினால்தான் எந்தவொரு சமூக பொருளாதார மறுமலர்ச்சியையும் வாழ்க்கைத்தர மேம்பாட்டையும் கொண்டு வர முடியும் என்று சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சுபாஸி திஸ்ஸநாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் உன்னிச்சை - இராசதுரைநகர் கிராமத்தில் சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட 15 நிரந்தர வீடுகள் வெள்ளிக்கிழமை (07) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சுவீடன் கூட்டுறவு நிலையம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைச் செய்து வருகின்றது.

வீடமைப்புக்குப் பின்னர் இந்தக் கிராமம் சுவீடன் கூட்டுறவு நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் சமூகப் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தக் கிராமத்தைப் பல உதவித் திட்டங்கள் வந்தடைந்திருக்கின்ற போதும் நீடித்து நிலைத்து நிற்கக் கூடியதான அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதே எமது நோக்கமாகும்.

எந்த விதமான அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்க நிருவாக அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரைத் தேவையாக உள்ளது. அதனோடு மக்களும் தங்களது பூரணமான பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.

வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்திக் கொள்வதற்காகத் தரப்படுகின்ற வாழ்வாதார உதவிகளையும் ஏனைய உட்கட்டுமான வசதிகளையும் மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவற்றை ஒரு போதும் துஷ்பிரயோகம் செய்து விடவோ பராமரிப்பின்றிக் கைவிட்டு விடவோ கூடாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது சமூக பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை பரவலாக்கிக் கொண்டு செல்கின்றோம். தொடர்ச்சியாக ஒரே பிரதேசத்தில் மட்டும் நாம் நின்று விடுவதில்லை.

சமூகப் பொருளாதார அபிவிருத்தியின் முதற் கட்டமாக சமூக நலத் தயாரிப்பும் சமூக அணிதிரட்டலும் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இந்நிகழ்வில் சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ. மயூரன் உரையாற்றினார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இவ்வாண்டின் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட நிரந்தர வீடுகள் அமைக்கும் திட்டம் ஆறு மாத காலப்பகுதிக்குள்ளாகவே வெற்றிகரமாக முடிக்கப்பட்டு இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது கூட ஒரு முன்மாதிரிதான்.

வீடுகளின் தர நிர்ணயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எங்களது பொறியியல் பிரிவு இதற்காக அர்ப்பணித்து பணியாற்றியுள்ளது. எந்த விதமான ஏமாற்று மோசடிகளுக்கும் நாம் இடமளிக்கவில்லை.

இந்த வீடுகளையும் சுற்றுப் புறத்தையும் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டியது பயனாளிகளின் பொறுப்பாகும்.

இவ்வீட்டுத் திட்டத்துடன் மாத்திரம் எமது பணிகள் நின்று விடாது. அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்கு எமது சமூக பொருளாதார அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்து இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அபிவிருத்தி செய்வதற்கு எமது நிறுவனத்துக்கு வசதி வாய்ப்புக்கள் கிட்டியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை நாம் கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து செய்து வருகின்றோம்.

இராசதுரைக் கிராமம், கரடிப்பூவல், மண்டபக்கேணி, கற்பக்கேணி, குசலானமலை, தளவாய், களுவன்கேணி போன்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் மூலம் இதுவரை 137 நிரந்தர வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் அந்தக் கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மக்களும் நிர்வாக அதிகாரிகளும் ஒத்துழைக்கும் பட்சத்தில் எமது சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் சமூகப் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X