2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'த.தே.கூ. தற்போது பலமிழந்துள்ளது'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 10 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது பலமிழந்து நிற்பதுடன், வெறும் உணர்ச்சி வார்த்தைகளை மாத்திரம் மக்கள் மத்தியில் விதைத்து மக்களை ஏமாற்றிவருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

ஏனெனில், அவர்களால் எந்தவிதமான அபிவிருத்திகளையும் மேற்கொள்ளமுடியாது எனத் தெரிவித்த அவர்,  இவ்வாறானவர்களின் பின்னால் மக்கள் செல்வதை தவிர்க்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளை  மட்டக்களப்பு மாவட்டத்தின் கோட்டைக்கல்லாற்றில் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு  ஸ்தாபித்துவைக்கப்பட்டது.  இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பளாராக நான்; பொறுப்பேற்று ஒன்றரை வருடங்களாகின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்காகவே இங்கு வந்து  நான்  வேலை செய்வதாக பலர் கூறுகின்றார்கள்.

உண்மையில் கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் பட்டிருப்புத்தொகுதி மக்கள், எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவில்லை. மாறாக, பட்டிருப்புத்தொகுதி மக்கள் எதிர்த்தே  வாக்களித்திருந்தார்கள்.    தோல்வி அடையும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எமது பட்டிருப்புத்தொகுதி மக்கள், தொடர்ந்துவரும் ஜனாதிபதித் தேர்;தல்களில் வாக்களித்து வந்தால், எவ்வாறு பட்டிருப்புத்தொகுதியை அபிவிருத்தி செய்யமுடியும்?

இந்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் பாரியளவிலான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் மத்தியில் பொருளாதார ரீதியான அபிவிருத்திகள்  முன்னெடுக்கப்பட்டமை  இதுவரையில் குறைவாக உள்ளன. இதை  நானும் ஏற்றுக்கொள்கின்றேன்.  பொருளாதாரத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளைகள், கிராமங்கள் தோறும் அமைக்கப்படவேண்டும். இவ்வாறு  அமைந்தாலே இன்னும் மென்மேலும் பாரிய அபிவிருத்திகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளைகளூடாக கொண்டுசெல்லமுடியும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பட்டிருப்புத்தொகுதி மக்கள் வாக்களித்தாலும் அல்லது வாக்களிக்காவிட்டாலும் சரி,  மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் ஜனாதிபதியாக வரப்போகின்றார். இந்நிலையில், இங்குள்ளவர்கள் வீரவசனம் பேசிக்கொண்டு இந்த ஜனாதிபதியை ஆதரிக்கமாட்டோமெனக் கூறினால், அதனால் ஏற்படும் விளைவுகளும் எமது மக்களுக்கே வரப்போகின்றது.

வாக்களிப்பது ஒரு மனிதனின் உரிமை. அதை பலாத்காரமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அளியுங்களென நான் கூறவில்லை.  ஆனால், எதிர்காலத்தில் உங்கள் கிராமத்தின் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டுமாகவிருந்தால், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என்றே கூறுகின்றேன்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். அவரிடம் இந்தக் கிராம மக்கள் செல்லாமல், சிறிய சிறிய தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும்  என்னிடம் வருகின்றார்கள் என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எதுவும் செய்யமுடியாது என்பதாகும்.

அரசாங்கத்தை எதிர்த்து, அஹிம்சை வழியாகப் போராடி தமிழ் மக்களின் உரிமையை  பெற்று எடுக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது. ஆனால்,  அரசாங்கத்தை ஆதரித்து அபிவிருத்திகளை மேற்கொண்டு அரசாங்கத்துடன் பேசி தமிழ் மக்களின் உரிமையை  பெற்று எடுக்கலாம் என நான்; கூறுகின்றேன்.  இந்த இரண்டு நோக்கங்களும் ஒன்றே.

நான் ஒரு அமைப்பாளராக இருந்துகொண்டு பட்டிருப்புத்தொகுதியில் வீதி அபிவிருத்தி செய்தல், தென்னங்கன்றுகளை வழங்குதல் போன்ற சில சிறிய வேலைத்திட்டங்ளை மேற்கொண்டு வருகின்றேன். இந்த நிலையில், நான் ஒரு அமைச்சராக இருந்தால்,  பட்டிருப்புத்தொகுதியில் குறிப்பிட்ட காலத்துக்குள் பாரிய அபிவிருத்திகளை செய்து மாற்றங்களை ஏற்படுத்துவேன்.

நான் 3ஆம் ஆண்டுவரை படித்துவிட்டு காட்டிலிருந்து விட்டு, இங்கு வந்துள்ளேன் என நினைக்கக்கூடாது. நான் படித்தவன். மக்களை பற்றி நன்கறிந்தவன்.  அவுஸ்திரேலியாவில் மாதாந்தம்  8 இலட்சம் ரூபாய் நான் சம்பாதித்தேன். அதை விட்டுவிட்டு எமது மக்களின் அபிவிருத்திகளை  நோக்காகக் கொண்டு இங்கு வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினூடாக வேலை செய்கின்றேன். இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தல், பொருளதார ரீதியில் மக்களை உயர்த்துதல் போன்ற வேலைத்திட்டங்களை மிக விரைவில் பட்டிருப்புத்தொகுதியில் மேற்கொள்ளவுள்ளேன்'  எனக் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X