2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இடி அமீனின் கொடுங்கோல் ஆட்சி போன்ற மஹிந்த ஆட்சியை ஒழிப்போம்: மைத்திரி

Gavitha   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


இடி அமீனின் கொடுங்கோல் ஆட்சிபோன்று ஆட்சி செய்யும் மஹிந்தவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் திங்கட்கிழமை (29) நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மஹிந்தவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று இப்பொழுது நாட்டு மக்கள் கங்கணம் கட்டி இருக்கின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷ நாட்டை சகட்டு மேனிக்கு அழித்தொழித்தவர். நீதித்துறை, நிருவாகத்துறை, பொலிஸ்துறை என்று எல்லாவற்றையுமே அழித்து துவம்சம் செய்துள்ளார்.

நாடாளுமன்ற ஆட்சியை தலைகீழாக மாற்றினார். நாட்டிலுள்ள  முப்படையினரையும் தனது குடும்ப நிருவாகத்துக்கு கீழே கொண்டுவந்தார். வர்த்தகத்துறையை தனது குடும்பத்துக்குரியதாக மாற்றினார்.

மஹிந்த ஆட்சியின் கீழ் ஜனநாயகம் பறித்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், எமது அரசாங்கம் வறுமைக்குரிய மக்களுக்கான அரசாக இருக்கும். நீதித் துறையை வலுப்படுத்தி சிறந்த அரசாங்க நிருவாக சேவையை ஏற்படுத்துவோம்.

விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம். தொழிலில்லாத பத்துலட்சம் பேருக்குத் தொழில்வாய்ப்பு ஏற்படுத்துவோம்.
நான் ஒரு விவசாயக் குடும்பத்தின் பின்னணியைக் கொண்டவன் என்கின்ற அடிப்படையில், எனது அரசாங்கம் விவசாயிகளின் அரசாங்கமாக இருக்கும். மீனவர்களின் நலன்களும் பேணப்படும்.

இது பொதுமக்களின் அரசு. எனது அரசு தனிக்குடும்ப அரசாக இருக்காது.

நான் மஹிந்த ராஜபக்ஷ போன்று மன்னராட்சி புரியமாட்டேன். அவர் இந்த நாட்டு மக்களின் சொத்துக்களைக் கொண்டு மாடமாளிகைகளைக் கட்டியிருக்கின்றார். ராஜபக்ஷவின் குடும்பம் மன்னர்களின் குடும்பங்களைப் போன்று உல்லாசமாக வாழ்கிறது.
இது சிங்கள, தமிழ், முஸ்லிம்; இன, மத வேறுபடின்றி இந்த நாட்டை ஆள்வோம். எல்லோரும் தான் விரும்பும் மதத்தை அனுசரித்துக் கொண்டு ஐக்கியமாக வாழ முடியும்.

துஷ்பிரயோகம் செய்கின்ற மஹிந்தவுக்கு வாக்களிக்காமல், சிறந்த முறையில் மக்களாட்சியை கொண்டுவரப்போகும் ஆட்சி மாற்றத்துக்கு வாக்களியுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளர் ஜயசூரிய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரெட்ன, கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர், கிழக்கு மாகாண சபை அமைச்சர் நஸீர் அஹமட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X