2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மதுபான விடுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

Editorial   / 2025 டிசெம்பர் 21 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாப்பிரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று  அதிகாலை மதுபான விடுதிக்கு வெளியே நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகருக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் பெக்கெர்ஸ்டால் பகுதி உள்ளது. இங்குள்ள மதுபான விடுதிக்கு வெளியே  அதிகாலை 1 மணியளவில் பலர் கூட்டமாக நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இரண்டு கார்கள் வேகமாக வந்து சட்டென நின்றுள்ளன. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கார்களில் இருந்த சுமார் 10 பேர், மதுபான விடுதிக்கு வெளியே இருந்த கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினர். சுமார் அரை நிமிடம் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த கொடூர தாக்குதலில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ​பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமூக விரோத கும்பல்களுக்கு இடையேயான மோதல்களாலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தென்னாப்பிரிக்கா தலைநகர் பிரெட்டோரியாவில் உள்ள சால்ஸ்வில்லி பகுதியில் கடந்த டிசம்பர் 6-ஆம் திகதி நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 3 வயது குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

தென்னாப்பிரிக்காவில் தனிநபர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள எளிதாக உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இதனால் அங்கு பலர் சொந்தமாக துப்பாக்கி வைத்துள்ளனர். இதுதவிர, சட்டவிரோத துப்பாக்கி விற்பனையும் அந்நாட்டில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதுவும் தென்னாப்பிரிக்காவில் அதிக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ காரணம் எனக் கூறப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X