Editorial / 2025 டிசெம்பர் 21 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை நமது நாட்டிற்கு கடன் மீளச்செலுத்தும் சலுகைக்காலம் தேவைப்படுவதால், IMF ஒப்பந்தத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சூறாவளிக்கு முன்பு இருந்த சூழ்நிலைக்கு மத்தியிலேயே, 2028 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமான விடயமாக அமைந்து காணப்படுகின்றன. 2033 இல் இருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறே IMF கூறியிருந்தது. ஆனால் அப்போதைய அரசாங்கம் 2028 தொடக்கம் கடனை அடைப்போம் என தானாகவே இணக்கப்பாட்டுக்கு வந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் இப்போதாவது இந்த ஒப்பந்தத்தை திருத்தியமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
அரநாயக்க ரிவி சந்த வித்தியாலயத்திற்கு நீர் இறைக்கும் இயந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை (21) அன்று நன்கொடையாக வழங்கி வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்த பாடசாலை வளாகத்தில் இடைத்தங்கல் முகாமில் இருக்கும் மக்களின் சுக துக்கங்களை கேட்டறியச் சென்ற வேளை, அங்குள்ள மக்கள் தங்கள் குடிநீருக்காக தண்ணீரைப் பெறுவதில் சிரமப்படுவதை அறிந்த பிற்பாடே இந்த நீர் இறைக்கும் இயந்திரம் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள மலைப்பகுதிகளில் புவியியல் ஆராய்ச்சிகளை நடத்துவது முக்கியமான பணியாகும். இந்த ஆராய்ச்சியை விரைவுபடுத்தி, அது குடியேற்றத்திற்கு ஏற்ற பகுதியா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். முடிவை உறுதிப்படுத்துவதோடு, காணி, வீடு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பாக நேரடித் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
மக்களின் சுக துக்கங்களை கேட்டறிய இடைத்தங்கல் முகாம்களுக்குச் சென்ற சமங்களில், இங்கிருக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. மக்களைத் தூண்டுவதற்காக இத்தகைய விஜயங்களை நான் மேற்கொள்ளவில்லை. மாறாக அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காகவே இதைச் செய்து வருகிறேன். ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சுத் திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் இதுபோன்ற உதவிகளைச் செய்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வர்க்கம், நிறம், கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நம்மை அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும். இந்தப் பேரழிவில் வர்க்கம், நிறம் அல்லது கட்சி வேறுபாடுகள் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு நாம் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு அவர்களை மீட்டெடுக்க நாம் கை கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக மக்களுக்கு நான் செய்து வரும் சேவைகளைப் பார்த்து, கேலி செய்தாலும், அது பற்றி நான் கவலைப்பட மாட்டேன். தொடர்ந்தும் மக்களுக்கு சேவை செய்வேன். உண்மையைப் பேசும்போது, கேலி செய்கின்றனர். யார் என்ன கேலி செய்தாலும், நாட்டு மக்களுக்கு உதவுமாறு சகலரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago