2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பட்டிப்பளை தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் தங்களது  சேவைக்கு இடையூறு  ஏற்படுத்துவதாகக் கூறி,  மட்டக்களப்பு,  பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொண்டனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை பட்டிப்பளை பொது விளையாட்டு மைதானத்தில் தங்களது  பஸ் வண்டிகளை நிறுத்திவைத்து,  பணிப்புறக்கணிப்பையும் ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொண்டுனர்.

கொக்கட்டிச்சோலையிலிருந்து மட்டக்களப்பு சேவையில் ஈடுபடும் சுமார் 25 க்கும் மேற்பட்ட பஸ் உரிமையாளர்கள், ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.
கொக்கட்டிச்சோலைவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள தங்களது  சேவையை  அம்பிளாந்துறைவரை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கையை  உரிய தரப்பினர் மேற்கொள்ளவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

மிக முக்கியமாக இப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் காத்தான்குடி இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள், நேர அட்டவணையின்றி தங்கள் விருப்பத்திற்கேற்றாற்போல் சேவையில் ஈடுபடுவதன் காரணமாக தம்மால் சேவையை  முறையாக நடத்தமுடியாத நிலையேற்பட்டுவருவதாகவும் இங்கு கவலை தெரிவித்தனர்.

மண்முனை பாலம் அமைப்பதற்கு முன்னர் மண்முனையிலிருந்து மட்டக்களப்புவரையில் தனியார் பஸ்கள் மட்டுமே பொதுமக்களுக்கு சேவை வழங்கிவந்தது.எப்போதாவது ஒரு தரமே இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையை  வழங்கும்.
ஆனால், பாலம் அமைக்கப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியான சேவையை  வழங்கி எமக்கு பாரிய அநீதியை இழைத்துவருகின்றனர். ஒரு நேர அட்டவணையை  இரு தரப்பினரும் இணைந்து செயற்படுத்தவேண்டும். அது தொடர்பில் நாங்கள் கோரிக்கை விடுத்தும் அது இலங்கை போக்குவரத்துசபையினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் இதன் காரணமாக கடும் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் தினமும் 200 ரூபாய் தொடக்கம் 300 ரூபாய் வரையான சம்பளமே தமக்கு கிடைப்பதாகவும் அதனைவிட பஸ் உரிமையாளர்கள் கடும் கஷ்;டங்களை எதிர்நோக்குவதாகவும் தமது பஸ்ஸை திருத்துவதற்கு கூட பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும் இதன்போது தமது கவலையை தெரிவித்தனர். இதற்கு தமக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தொடர்ச்சியாக தாம் இந்த பகிஷ்;கரிப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை பஸ்களின் செயற்பாடுகள் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடொன்றை பட்டிப்பளை தனியார் பஸ் சங்கத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .