2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்த யுகத்தில் அரசியல்வாதிகள் பணப்பையை நிரப்புவதற்காகவே வீதிகளை புனரமைத்தனர்: சுபைர்

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

 மஹிந்த யுகத்தில் அரசியல்வாதிகள் தமது பணப்பையை நிரப்புவதற்கு ஏற்றவகையில் வீதிகள் புனரமைக்கப்பட்டன என்பதை நானும் அறிவேன், நாட்டு மக்களும் அறிவார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் மிச்நகர் - றெட்பானா வீதியின் புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைத்து அவர் உரையாற்றிய போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம். அஸீம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

மக்கள் வசிக்காத காடு மலைசார்ந்த இடங்களிலும் சுமார் ஒரு கிலோமீற்றருக்கும் அதிக நீளத்தைக் கொண்ட வீதிகள் அமைக்கப்பட்டுள்ளதை நான் கண்டிருக்கின்றேன்.

அதேவேளை, மக்கள் நடமாட்டமுள்ள பல வீதிகள் இன்னமும் குன்றும் குழியுமாகி கிறவல் கூட இல்லாத நிலையில் கிடப்பதைக் காண முடிகின்றது. இவை மக்களுக்குச் செய்யப்பட்ட மாபெரும் அநியாயங்கள்.

இவ்வாறான வீதிகளை பெற்றுக் கொள்கின்ற அரசியல்வாதிகள்  கொந்தராத்துக் காரர்களிடம்,  நீங்கள் எப்படியாவது வீதியை அமைத்து விடுங்கள். ஆனால், எனக்குரிய தரகுப் பணம் வந்து சேர்ந்து விடவேண்டும் என்று சொல்லி விடுவர்.
இதனையடுத்து, வீதி நிர்மாணிப்பதற்கு முன்னதாகவே தரகுப் பணம் அரசியல்வாதிகளின் கைகளக்குப் போய்ச் சேர்ந்து விடும். கடந்த காலங்களில் இதுதான் நடந்தது.

இப்படி நிருமாணிக்கப்பட்ட வீதிகள் ஐந்தாறு மாதங்களின் பின்னர், முன்னர் இருந்தததை விட மிக மோசமாக உடைந்து மக்கள் பயணம் செய்ய முடியாதவாறு காணப்படுகின்ற காட்சிகளை நாம் காண்கின்றோம்.

ஆனால், மைத்திரியின் நல்லாட்சியில் மக்களிடமே வீதிகளை நிருமாணிக்கின்ற பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மக்களின் முழுமையான பங்களிப்போடு இதனைச் செய்தால் அதற்குச் சன்மானமாக போனஸ் நிதியையும் மக்கள் அமைப்புக்களுக்குத் தருவதாகவும் கூறப்பட்டிருக்கின்றது.

எனவே, மக்கள் தங்களுக்கு ஏற்ற விதத்தில் தரமாகவும் நேர்த்தியாகவும் இந்த வீதியை நிருமாணிக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சிவலிங்கம், ஏறாவூர் நகரசபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம். நஸீர், எம்.எல். அப்துல் லத்தீப், ஏறாவூர் நகர பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம். அஸீம் உட்பட பலர் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .