2025 மே 17, சனிக்கிழமை

'தமிழருக்காக குரல் கொடுத்துள்ள கட்சிகள் த.தே.கூ. வுடன் சேரவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 மே 11 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா. எஸ். பாக்கியநாதன்

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேரவேண்டும் என்று கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பயனியர் வீதி மோர்சாப்பிட்டி வை.எம்.ஏ.சி.விளையாட்டுக்கழகத்தின் 87ஆவது ஆண்டு நிறைவையொட்டி  விளையாட்டு விழா, அவ்விளையாட்டுக்கழக மைதானத்தில்  ஞாயிற்றுக்கிழமை (10) நடத்தப்பட்டது.  இதில்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு தமிழன் தமிழனாக வாழவேண்டும். தமிழன் இருக்கும்போது வீரனாக இருப்பான், இறக்கும்போதும் வீரனாகவே இறப்பான் என்பதை நாங்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

தற்போது நாங்கள் ஓரளவு மீண்டு வந்துள்ளோம். ஜனவரி எட்டாம் திகதி அந்த விடுதலைக்காக தமிழினம் வாக்களித்தது. தற்போதுள்ள இதே தலைவர் இன்னும் பத்து ஆண்டுகள் இந்த நாட்டை  ஆட்சி செய்தால், சிறுபான்மை இனத்துக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த காலப் பகுதிக்குள் நாங்கள் எதிர்பார்க்கும் சில வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

எத்தனையோ ஆண்டுகளாக அகதி வாழ்வு வாழ்ந்த  சம்பூர் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின்  இடங்களில் தொழில்களை தொடங்கி வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

படிப்படியாக எமது உரிமைகள் பெறப்படவேண்டும். அதற்காக நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கவேண்டியுள்ளது. கிழக்கு மாகாணசபையில் முதன்முறையாக ஆட்சி அதிகாரத்தில் பங்குபற்றியுள்ளோம். இரண்டு அமைச்சர்கள் கிழக்கு மாகாணசபையில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.

கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபையில் தமிழர்கள் பின்தள்ளப்பட்டார்கள், ஒதுக்கப்பட்டார்கள். இவ்வாறான நிலைமை இனிமேல் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆட்சி அதிகாரத்தில் நாங்கள் பங்குகொண்டுள்ளோம்.

கிழக்கு மாகாணசபை தொடர்பில்  தமிழ் மக்கள் பலத்த எதிர்பார்ப்புடன்  உள்ளனர். இந்த நிலையில்,  எங்களின் கிழக்கு மாகாண அமைச்சர்கள் துரிதமாக செயற்படவேண்டும். எமது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டும். சில தற்துணிவான முடிவுகளை எடுத்து, எமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும் என்று இவ்வேளையில் அறைகூவுகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 78 சதவீதம் தமிழ் மக்களும் மிகுதியாக ஏனைய இனத்தவர்களும் உள்ளனர். வாக்குரிமை தொடர்பில் நாங்கள் சிந்திக்கவேண்டும். வாக்குரிமை  எமது அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையின் ஊடாகவே நாங்கள் நினைத்ததை பெறமுடியும். எமது உரிமையையும் பெறமுடியும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .