2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'போராட்ட வழிமுறைகளை பின்பற்றாமையினால் பல இழப்புக்களை சந்திக்க நேரிட்டது'

Thipaan   / 2015 மே 17 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

போராட்டமானது புனிதமானது  போராட்டத்தின் போது போராட்ட வழிமுறைகளை பின்பற்றாமையினால் அது பயங்கரவாத அமைப்பாக மாறி எமது மக்கள் பல இழப்புக்களை சந்திக்க நேரிட்டது என்று ஈழவர் ஜனநாயக முன்னனியின் (ஈரோஸ்) செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன், இன்று (17)  தெரிவித்தார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளிக் கிராமத்தில்  ஈரோஸ் கட்சியின் அரசியல் பணிமனையினை வைபவ ரீதியாக திறந்து வைத்து அதிதியாக கலந்து கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இவ்வலுவலகமானது இப்பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்ட இரண்டாவது அலுவலகம் என்பது குறிப்பிடத்தக்கது.

'தொடர்சியாக இடம்பெற்று வந்த கொடிய யுத்த சூழ்நிலை காரணமாக எமது மக்களின் உயிரிழப்புக்கள் பொருளாதார இழப்புக்கள் அந்நிய நாடுகளுக்கான இடம்பெயர்வு அகதிவாழ்க்கை விதவைக்கோலம் மட்டுமல்ல ஊனமுற்றவர்கள் மனநோயாளிகள் சிறைக் கைதிகள் மற்றும் காணமற்போனோர் என யுத்தத்தின் பின் விளைவுகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்' என கூறினார்.

'இதற்கெல்லாம் காரணமானவர்கள் யார் என்று நான் கூறி புரிய வைக்க வேண்டிய தேவை இல்லை. எல்லா விடயமும் உங்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வாறு யுத்த பிடியில் சிக்கிய நீங்கள் மீண்டும் முன்னைய நிலைமைக்கு வந்து விட்டீர்களா. அதற்கு எவ்வாறு வழி தேடுவது. இதனை முன்னெடுத்துச் சென்று உங்களுக்காக செயற்படக் கூடியதொரு வழிகாட்டியினை தெரிவு செய்து தற்போது கல்வி பொருளாதாரம் மற்றும் பல விடயங்களை தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கிறோம்.

அத்துடன் 35 வருடங்களுக்கு மேல் பின்னோக்கிய பலவீனமானதொரு சமூகமாக காணப்படுகின்றோம். இது எமது விடுதலைப் போராட்டத்துக்கு கிடைத்த பரிசாகும்.

எனவே, விடுதலைப் போராட்டமானது சரியான வழிமுறைகளை பின்பற்றி போராடியிருக்குமானால் ஒரு சரியான தீர்வொன்றை விரைவில் பெற்றிருக்கும்' என தெரிவித்தார்.

'தற்போது எமது மக்களின் தேவைகளை கட்டியெழுப்புவதற்கு அரசியலில் பேதம் பார்க்காது அனைவரும் முன்வந்து செயற்படவேண்டிய தேவையுள்ளது.

அவ்வாறு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்புடன் எமது மக்களின் எதிர்காலம் குறித்து  செயற்படுவதன் மூலமே உன்னத நிலைக்கு கொண்டு வர முடியும். 

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றி தருவோம் என்று கட்சிகள் சில காலத்துக்கு காலம் பொய் வாக்குறிதிகளை கூறி ஏமாற்றி வருகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் முன்வைக்கப்படும் வாக்குறிதிகள் சில முற்றிலும் நிறைவேற்றமுடியாதவைகளாகவும் உள்ளன. இனிமேலாவது தேர்தல் காலங்களில் எமது மக்களை ஏமாற்றாது நிறைவேற்றக் கூடிய வாக்குறிதிகளை முன்வையுங்கள் அல்லது மக்கள் சேவை செய்யக் கூடியவர்களுக்கு வழி விட்டு உதவுங்கள்' என தெரிவித்தார்.

'கடந்த காலத்தில் பாரிய அரசியல் மாற்றத்தை முன்னின்று உழைத்த பங்கு எமக்கு உண்டு. அன்று சிந்தித்தமை போன்று எதிர்காலத்திலும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களிடையே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் அரசியல் மாற்றத்தினை கொண்டு வர சிந்திக்கவேண்டும்.
 
அதற்கு உங்களுக் முன்னின்று உழைக்கக் கூடிய  மக்கள் சேவகர்கனை அடையாளம் காண வேண்டும்.இனியும் ஏமாற வேண்டாம். ஏமாந்தது போதும்.

எமது அமைப்பானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகங்களில் தனித்தே போட்டியிடும். எமது கட்சியில் இணைந்து கொள்வதற்கு விருப்பமுள்ளவர்கள் மாற்றுக் கட்சியினை சேர்ந்தவர்களுக்கு ஈரோஸ் அமைப்பின் கதவு என்றும் திறந்திருக்கும்' என்று அவர் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .