2025 மே 17, சனிக்கிழமை

'முஸ்லிம் அரசியல்வாதிகள் பொட்டணி வியாபாரிகள் போன்று உசுப்பேற்றுவார்கள்'

Suganthini Ratnam   / 2015 மே 18 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தேர்தல் காலங்களில் பொட்டணி வியாபாரிகள் போன்று முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் படையெடுத்து முஸ்லிம்களை உசுப்பேற்ற வருவார்கள் என்று  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் கிராமத்தில் இன்று திங்கட்கிழமை  85 இரும்பு வியாபாரிகளுக்கு இலவசமாக சைக்கிள் டயர்கள் உள்ளிட்டவை வழங்கும் நடவடிக்கை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'பாதிக்கப்பட்ட ஏழை மக்களை வைத்துப் பிழைப்பு நடத்துவதே இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் வேலையாகிப் போய்விட்டது.

வடபுலத்திலிருந்து உடுத்த உடுப்போடு விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பற்றி முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகள் இப்பொழுது வாய் திறப்பதில்லை.

முப்பது வருடங்களுக்குப் பின்னர் அந்த அப்பாவி மக்கள் மன்னார் முசலி, மறிச்சுக்கட்டியில் தமது சொந்த மண்ணில் மீள்குடியேறச் சென்றால், அங்கும் கைவரிசை காட்டப்படுகின்றது' என்றார்.

'அமைச்சர் ரிசாட் பதியுதீன் தன்னந்தனியாக நின்று வடபகுதி முஸ்லிம்களுக்காக போராடுகின்றபொழுது, முஸ்லிம்களின் அதிக ஆதரவை பெற்றவர் என்று கூறிக்கொள்கின்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் வடபுல முஸ்லிம்களுக்காக ஒரு வார்த்தையேனும் ஆதரவாக  குரல் கொடுப்பதில்லை.

ஆயுத ரீதியாக போராடிய தமிழ்த் தலைவர்களால் பெற்றுக்கொடுக்க முடியாமற்போன உரிமைகளை ஜனநாயக ரீதியாக  போராடி பெற்றுத் தந்தவர் எங்கள் தலைவர் ரிசாட் பதியுதீன்.  அவருக்கு எதிராக இப்பொழுது சர்வதேச சூழ்ச்சிகளோடு சில குழுக்கள் இயங்குகின்றன.

முஸ்லிம்கள் சிவில் சமூகமாக அணிதிரண்டு தங்களது பிரச்சினைக்கான தீர்வுகளை அணுகவேண்டும்.' எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில்; கிழக்கு மாகாணசபையின் முன்னாள் கல்வியமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த விமலவீர திஸாநாயக்க, ஏறாவூர் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.நஸீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .