2025 மே 17, சனிக்கிழமை

கூட்டுமுயற்சியே வெற்றிக்கு வழிவகுக்கும்: பாலசுப்ரமணியம்

Gavitha   / 2015 மே 21 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

முழுமையான ஆயத்தம், சிறந்த திட்டமிடல், அர்ப்பணிப்பு, கூட்டு முயற்சி என்பனவே வெற்றிக்கு வழி என ஏறாவூர்ப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம். பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

19 வயதுக்குக் கீழ்பட்ட மாணவிகளுக்கான எல்லே சம்பியன் போட்டியில் ஏறாவூர் தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவிகள் மாகாண சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை வரவேற்கும் நிகழ்வு, வியாழக்கிழமை (21) தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எஸ். ரவிதேவன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது எமது கல்விக் கோட்டத்துக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். பாரிய முயற்சியுடன், சிறப்பான முன்னெடுப்புக்களுடன், முழுமையான ஆயத்தத்துடன், சிறந்த திட்டமிடலுடன், மேற்கொள்ளப்படும் எந்தக் காரியமும் வெற்றியடையலாம் என்பதற்கு தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவிகளின் வெற்றி ஒரு சிறந்த முன்னுதாரணமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

வெற்றிக்குப் பின்னால் அநேக படிப்பினைகள் உள்ளன. அதேபோன்று தோல்விக்குப் பின்னாலும் ஏராளமான பாடங்கள் உள்ளன. அவற்றையும் நாம் வாழ்க்கைப் பாடங்களாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

சிறந்த ஆற்றல் மிக்க தலைமைத்துவம், வகுப்பிலும் பாடசாலையிலும் வீட்டிலும் சமூகத்திலும் தேவை.

அவ்வாறானவர்களாலேயே வெற்றியைச் சாதிக்க முடியும் என்று தெரிவித்த அவர், இந்த வெற்றியடைந்த மாணவிகளால் ஒதுக்குப் புறக் கிராமமான தளவாய் கிராமத்தின் புகழ் கிழக்கு மாகாணம் முழுக்க பறைசாற்றப்பட்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.

360 மாணவர்களைக் கொண்ட தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயம் 3,600க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடியது சாதாரணமாண விடயமல்ல என்று கல்வி அதிகாரிகள் மத்தியிலும் இப்பொழுது தளவாய்க் கிராம மாணவர்களின் வெற்றி சிலாகித்துப் பேசப்படுகின்றது என்று அவர் கூறினார்.

முற்றிலும் கிராமச் சூழலைக் கொண்டிருக்கும் இந்த மாணவர்கள், நல்ல வசதி வாய்ப்புக்களோடு உள்ள நகர்ப்புற மாணவர்களோடு மனத் தைரியத்துடன் போட்டியிட்டு வெற்றியை நிலை நாட்டியிருக்கின்றார்கள். எங்களாலும் முடியும் என்பதுதான் எமது வெற்றியின் அடித்தளம்.' என்றார்.

பாடசாலை அதிபர் எஸ். ரவிதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உடற்கல்வி விளையாட்டு பாடவிதான ஆசிரியர் ஏ. அஷ்லி, அணித் தலைவி கே. நிரஞ்சனி உட்பட பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள இந்தப் பாடசாலை பல்வேறு அடிப்படை வசதியீனங்களுடன் இயங்கி வருகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .