2025 மே 17, சனிக்கிழமை

காத்தான்குடியில் எரிபொருள் நிரப்பு நிலையம் இயங்காமையால் மீனவர்கள் அசௌகரியம்

Suganthini Ratnam   / 2015 மே 26 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரையோரத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மீனவர்களுக்கான  எரிபொருள் நிரப்பு நிலையம் இயங்காதுள்ளமையால்,  அது அழிவடைந்துவருவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்காக கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில்  கடற்றொழில் நீரியல்வளத்துறை  அமைச்சினால் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினூடாக இந்த எரிபொருள் நிரப்பு நிலையம், காத்தான்குடி, ஏத்துக்கால் கடற்கரையில் 2012ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.

இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்து பல வருடங்களானபோதிலும் இதுவரையில் இயங்காமலுள்ளது. இதனால், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான எரிபொருள் தாங்கிகள் மற்றும் உதிரிப்பாகங்கள் துருப்பிடித்து நாசமாகிவருவதாகவும் மீனவர்கள் கூறினர்.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை இயங்கச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் இந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில்  கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் றுக்சன் குறூசிடம் கேட்டபோது, 'இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்காக அப்பகுதியிலுள்ள ஜெயிலானி ஆழ்கடல் மீனவர் சங்கத்துக்கு  அனுமதி வழங்கப்பட்டது.  அந்தச் சங்கம்; எரிபொருளை அப்பகுதி மீனவர்களுக்கு விநியோகித்தனர். எனினும்,  கடனுக்கு எரிபொருள் வழங்கியதால் கடனை  அறவிடமுடியாமல் போனது, இந்த நிலையில், இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் இயங்கமுடியாத நிலையில் மூடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை இயங்கச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .