2025 மே 17, சனிக்கிழமை

சமூகசேவை உத்தியோகஸ்தரின் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 மே 27 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவந்த சமூகசேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதயான்  (வயது 44)  இனந்தெரியாதோரினால்  சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் கிராமத்திலுள்ள அவரது வீட்டில்  தனது குடும்பத்தவர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாடிக்கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர், அவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றிருந்தனர்.  
இந்த சம்பவத்தை தொடர்ந்த  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களையும் சேர்ந்த  சமூகசேவை உத்தியோகஸ்தர்கள், மாவட்ட சமூகசேவைகள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் ஆகியோரின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.  ஆர்ப்பாட்ட இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

'அமைதியான சூழலை ஏற்படுத்துங்கள்', 'விரைவாக தண்டனை வழங்குங்கள்', 'அரச உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்', 'நீதியை நிலைநாட்டுங்கள்' போன்றவை எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது சக உத்தியோகஸ்தரான சச்சிதானந்தம் மதிதயான்  26-05-2015 அன்று  இனந்தெரியாத ஆயுததாரிகளினால் மண்டூரிலுள்ள அவர வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

குடும்பஸ்தரான இவர்  1999ஆம் ஆண்டிலிருந்து சமூகசேவை உத்தியோகஸ்தராக மட்டக்களப்பு மாவட்டத்தின்  பல பிரதேச செயலகங்களில் கடமையாற்றி தற்போது நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்த வேளையில் இந்த துக்ககரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தை  வன்மையாக கண்டிக்கின்றோம்.

நாட்டில் வன்செயல் ஓய்ந்து நல்லாட்சி நிலவும் இந்த வேளையில் இவ்வாறான ஒரு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. மழை ஓய்ந்தும் தூவாணம் முடியவில்லை என்பது போல் இந்நிலை காணப்படுகின்றது.

எனவே, இவ்வாறான குற்றவாளிகளை வளரவிடாது உடனடியாக கொலைக்கான காரணத்தையும்; சூத்திரதாரிகளையும் கண்டுபிடித்து தண்டனை வழங்குவதன் மூலம் நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதுடன், அரசாங்க உத்தியோகஸ்;தர்கள் இடையிலும் பொதுமக்கள் இடையிலும் காணப்படும் பீதியை தடுத்து நிறுத்த உதவுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .