2025 மே 17, சனிக்கிழமை

'அரசியல் காற்றின் வேகம் வித்தியாசமாக அடித்துவிடும் என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கின்றது'

Thipaan   / 2015 மே 27 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

தற்போது தென்னிலங்கையிலும் நம்முடைய பிரதேசத்திலும் வீசிக்கொண்டிருக்கின்ற அரசியல் காற்றின் வேகம் சில வேளைகளில் வித்தியாசமாக அடித்து விடும் என்கிற அச்சம் நாட்டு மக்களின் வாழ்வைப் பற்றி சிந்திக்கின்ற எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கின்றது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம், நேற்று செவ்வாய்க்கிழமை(26) தெரிவித்தார்.

வாகரைப் பிரதேசத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'நாம் மிக முக்கியமான ஆறு ஆண்டு காலத்தை தற்போது கடந்து விட்டோம். ஒரு நாடு போருக்கு பின்னரான காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் சம்மந்தமாக உலக நாடுகள் மிக நுட்பமாக ஆராய்ந்து, அதற்கான திட்டங்களையும் கொடுத்து அவற்றுகான நிதிகளையும் கோடி கோடியாகக் கொடுத்திருந்தது. ஆனால் அவை முறையாக நடாத்தப்படவில்லை' என தெரிவித்தார்.

'போரின் பின்பு நடக்க வேண்டியது புனர்நிர்மாணம். அது கடந்த ஆறு ஆண்டு காலமாக எவ்வாறு இடம்பெற்றது என்று உள்ளங்கை நெல்லிக் கனியாக எமது மக்களுக்குத் தெரியும்'.

'அபிவிருத்தி என்பதில் மனமானது பயம் பீதி போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டும். தற்போதைய ஜனாதிபதி அதுபற்றி பல தடவைகள் சொல்லியிருக்கின்றார்.

அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் எல்லாம் அவர் அதனை மிகவும் தெளிவாகச் சுட்டிக் காட்டிருக்கின்றார். ஆனால் கடந்த காலங்களில் அவ்வாறான அபிவிருத்தி இடம்பெறவில்லை' என சுட்டிக்காட்டினார்.

'தற்போது இறந்தவர்களை நினைவுகூரும் நாள் என்று மாற்க்றியமைகப்பட்ட, எமது முள்ளிவாய்யகால் நினைவினை இராணுவ வீராகளுடைய வெற்றி தினமாக கொண்டாடுகின்ற ஒருவர் இருக்கின்ற நாட்டில், அவர் மெல்ல மெல்ல தலையெடுக்க நினைக்கின்ற நேரத்தில்,  புதிய ஜனாதிபதி இவ்விடயத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார் என்றால் அதன் ஜதார்த்தத்தினை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்'.

'இந்தத் தேர்தல்களின் பலாபலனை நாம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் கண்ணாரக் கண்டு உளமாற உணர்ந்திருக்கின்றோம்'.

'எங்களின் வாக்களிப்பு இந்த நாட்டில் ஏற்பட இருந்த மிகப் பெரிய ஜனநாயக அழிப்பு நிலையை சத்தமின்றி எவ்வாறு மாற்றியமைத்தது என்ற விடயத்தை சிந்தித்து, அந்த ஜனநாயகப் பலம் மிகவும் அவதானமாக எந்தப் பக்கத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை சிந்தித்து பாவிக்க வேண்டிய கடமை எமக்கு இருக்கின்றது'.

'எனவே வருகின்ற தேர்தல்களில் எமது வாக்களிப்பு இப்போது ஏற்பட்டிருப்பது போன்று தேசிய ஐக்கியத்தை நிலைத்திருக்க கூடிய விதத்திலான ஓர் அரசினை அமைப்பதற்கான வாக்களிப்பாக இருக்க வேண்டும்'.

'ஒன்றுபட்ட நாட்டுக்குள்ளே உள்ளக சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தக் கூடிய ஒரு அரசியல் அமைப்பை நாம் கோரிநிற்கின்றோம். அதனை செய்விப்பதற்கு வடக்கு, கிழக்கில் இருந்து செல்ல வேண்டிய பிரதிநிதிகள் ஓர் அணியில் இருந்து செல்ல வேண்டிய மிகவும் முக்கியமான கட்டாயம் இருக்கின்றதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்' என தெரிவித்தார்.

'எனவே, எமது எதிர்காலம் அதிக துரத்தில் இல்லை. அடுத்த அடியை எடுத்து வைக்கின்ற மிகக் குறுகிய தூரத்தில் நாம் இருக்கின்றோம்; எனவே, அந்த இடத்தில் நின்று நாம் சிந்திக்க வேண்டும்'.
'எனவே  தென்னகத்து மக்கள் இப்போது இருக்கின்ற சமாதானம் நீடிக்கும் நிலையை ஏற்படுத்தக் கூடிய விதத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரத்தைப் பலப்படுத்த வேண்டும்.'

'அதேவேளை, நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்துகின்ற போதுதான் எம்மை அனுசரித்துச் செல்கின்ற எமது அபிலாசைகளையும் ஏற்றுக் கொள்ளுகின்ற அரசு ஏற்படும் அவ்வாறு ஏற்படுகின்ற போதுதான் நாங்கள் சொல்லியிருக்கின்ற விடயங்களை சாதிப்பது மிகவும் இலகுவாக இருக்கும்.' என மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .