2025 மே 16, வெள்ளிக்கிழமை

முதியோர் பராமரிப்பு உபகார சேவை பயிலுநர்களுக்கான பயிற்சி நெறி

Gavitha   / 2015 மே 31 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யதாஜித்

முதியோர் பராமரிப்பு உபகார சேவை பயிலுநர்களுக்கான பயிற்சி நெறியொன்று மட்டக்களப்பில் சமூக சேவைகள், சமூக நலன்புரி, கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள தேசிய முதியோர் செயலகத்தினால் நடத்தப்பட்டது.

முதியோர்களைச் சிறந்த முறையில் பராமரிக்கக் கூடியவர்களை உருவாக்கும் இப்பயிற்சி நெறியின் இறுதிநாள் களப்பயிற்சி ,மட்டக்களப்பு இந்து இளைஞர்கள் மன்றத்தினால் நடத்தப்படும் கல்லடி விபுலானந்தா முதியோர் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை (30) நடைபெற்றது.

பத்து நாட்களைக்கொண்ட இப்பயிற்சிநெறியில், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 15 பேர் பங்கு கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இப் பயிற்சி நெறியில் முதியோர் பராமரிப்பு, முதுமையில் தொடர்பாடலும் முதியோருக்கான உணவுப் பழக்கவழக்கங்கள், சுகாதாரம், தலைமைத்துவம், மனித உரிமைகளும் முதியோர் சட்டங்களும் முதுமையில் உளநலம், சமயங்களின் பார்வையில் முதியோர், உடற்கூற்றியல், முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், மாகாண சமூக சேவை திணைக்களத்தின் சேவைகள், முதியோர் இல்ல முகாமைத்துவம், சமூக சேவை, சமூக நலன்புரி, சமூகப்பணி தொடர்பான விழிப்புணர்வுகள் விசேட தேவைக்குட்பட்ட முதியோர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கற்பித்தல்கள் நடைபெற்றன.

கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பத்து நாட்களைக் கொண்டதாக அமைந்த பயிற்சிநெறியில் முதல் கள்ளியன்காடு கிராம அபிவிருத்தி திணைக்கள கேட்போர் கூடத்தில் 6 நாட்கள் வகுப்பறைக் கற்பித்தலாகவும் 3 நாட்கள் மட்டக்களப்பிலுள்ள புனித யோசப் முதியோர் இல்லத்தில் முதியோர் இல்லப் பராமரிப்பு தொடர்பான களப்பயிற்சியும் இறுதிநாள் களப்பயிற்சி மட்டக்களப்பு இந்து இளைஞர்கள் மன்றத்தினால் நடத்தப்படும் கல்லடி விபுலானந்தா முதியோர் இல்லத்திலும் நடைபெற்றது.

கள்ளியன்காடு கிராம அபிவிருத்தி திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுகளில் உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர் எஸ்.அருள்மொழி, மாவட்ட செயலக சமூக சேவை உத்தியோகஸ்தர் வி.செல்வநாயகம், சிரேஸ்ட தொழில் வழிகாட்டல், உளவளத்துணையாளர் எஸ்.எஸ்.சிறிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி நெறிக்கான ஒருங்கிணைப்பினை மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்களான பி.விஸ்வகோகிலன், ஏ.மதுசூதனன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

முதியோர் தேசிய செயலகத்தின் நிதியில் நடத்தப்பட்ட இப்பயிற்சி நெறியில் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் முதியோர் தேசிய செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஆகியவற்றால் விரைவில் வழங்கப்படும் என பயிற்சிநெறியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .