2025 மே 16, வெள்ளிக்கிழமை

அத்துமீறி குடியேறியவர்களை மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்களாக பதிவுசெய்யும் முயற்சிக்கு த.தே.கூ அதிரு

Sudharshini   / 2015 ஜூன் 06 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம்  பட்டிப்பளை பிரதேசத்துக்குட்பட்ட கெவிளியாமடுவிலுள்ள அரச காணிகளில்  அத்துமீறி குடியேறியுள்ள அம்பாறை மாவட்ட  சிங்களவர்களை  மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்களாக பதிவுசெய்யும்  முயற்;சிக்கு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியும் கண்டனமும் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பி. செல்வராசா,  அரசாங்க அதிபர் சரோஜினிதேவி சார்ள்ஸை தொடர்பு கொண்டு தனது ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனக்கு எழுத்து மூலமான முறைப்பாட்டை முன்வைக்குமாறு அரசாங்க அதிபர் நாடாளுமன்ற உறுப்பினர் பி. செல்வராசாவிடம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தின்  எல்லைக் கிராமமான   கெவிளியாமடுவில்     அம்பாறை மாவட்ட சிங்களவர்கள் அத்துமீறி, அரச காணிகளை அபகரிப்பதாக ஏற்கனவே   பட்டிப்பளை பிரதேச மக்களினால்  குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளதோடு பிரதேச  வாசியொருவரால் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான விண்ணப்பங்கள்  அந்த பகுதி  கிராம சேவை அலுவலகரினால்  சட்ட விரோத குடியிருப்பாளர்களுக்கும்   வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலே நாடாளுமன்ற உறுப்பினர்,  அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தினாலே அத்து மீறிக் குடியேறியவர்களையும் வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவும் வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இந்த அத்துமீறிகள் ஏற்கனவே அந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளார்கள்.

அவ்வாறான சூழ்நிலையில் அரச காணிகளை அபகரிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களை இம்மாவட்டத்தில் வாக்காளராக பதிவு செய்வது ஏற்க முடியாது.

சட்ட விரோதமாக அரச காணிகளில் தங்கியுள்ளவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்நடவடிக்கை அத்துமீறிகளுக்குச் சாதகமாகக் கூட அமைந்துவிடக் கூடும்.

நாட்டில் ஒரு இடத்தில் வாக்காளராக பதிவு செய்தால் போதுமானது. அப்படி அவர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்வதென்றால் கடந்த ஆண்டுகளில் பதிவு செய்திருந்த அவர்களின்  சொந்த மாவட்டத்தில் பதிவு செய்ய முடியும்  என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .