2025 மே 16, வெள்ளிக்கிழமை

வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக திரியசவிய கடன் உதவி: அமீர்

Sudharshini   / 2015 ஜூன் 06 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வேண்டியே திரியசவிய கடன் திட்டத்தினை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது என வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

இந்நிகழ்வானது காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்றது. இதில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  பயனாளிகளுக்கு திரியசவிய கடன் உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதியமைச்சர் அமீர் அலி நான் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்த தன் பின்னர், எனது அமைச்சர் சஜித் பிரேமதாச என்னிடம் என்ன வேண்டும் என கேட்டார். அதற்கு நான் உங்களது ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் என்ன திட்டம் நடக்கிறதோ எனது கிழக்கு மாகாணத்திலும் நடக்க வேண்டும் என நான் கேட்டுக் கொண்டேன்.
அந்த அடிப்படையில்தான் இவ்வாறான வேலைத்திட்டங்களை எமது அமைச்சு இந்த பிராந்தியத்திலும் அறிமுகப்படுத்தியுள்ளது.

'எமது அமைச்சு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம், அதனோடு சேர்த்;து வீடமைப்பு வேலைத்திட்டம், வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்காக எமது இந்த கடன் திட்டம் என்பன தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எமது அமைச்சர் சஜித் பிரேமதாசவின் மாவட்டமான ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஜனாதிபதியின் மாவட்டத்திலும் பிரதியமைச்சராக இருக்கின்ற எனது மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டம் ஆகிய இம் மூன்று மாவட்டங்களிலும் இந்த திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுத்தத்தினாலும் சுனாமி அனர்தத்தினாலும் பாதிக்கப்பட்டு நொந்து போயுள்ள இந்த மக்களுக்கு ஒரு வாழ்வாதார உதவியினை செய்ய வேண்டும் என்ற பலமான எதிர்ப்பார்ப்புடன் தான் இந்த திட்டத்தினை நாங்கள் சுமந்து வந்தோம்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் சில பொருட்களை மக்களுக்கு வழங்கி வாக்குகளை அபகரித்து மக்களை சதாகாலமும்; பிச்சைக்காரர்களாக வைத்துக் கொள்ள வேண்டும் என அரசியல்வாதிகளில் ஒரு சாரரார் இந்த மாவட்டத்தில் இல்லாமலுமில்லை.

எனது பார்வை சற்று வித்தியாசமானது. என்னால் முடிந்த வரை வறிய மக்களுக்கு வாழ்வாதராத்தை வழங்கி அதன் மூலம் வறுமையை போக்கி பிள்ளைகளின் கல்வி மற்றும் சில விடயங்களை முன்னேற்ற வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில்தான் பல இரவுகள் இதற்காக திட்டமிடல் நடவடிக்கையை செய்து, இந்த பணியை மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு கொண்டு வந்துள்ளோன்.

இது வட்டியோடு சம்பந்தப்பட்ட விடயம். நான் ஒரு இஸ்லாமியன் என்ற வகையில் இதற்கு விவாதம் புரிவதற்கு நான் என்றும் தயாரில்லை. இருந்தாலும் அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் விடயங்களை இந்த மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக ஒரு இலட்சம் ரூபாய் வரை கொடுக்க கூடிய நிதியை 15,000 பேருக்கு கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இந்த திரியசவிய கடன் திட்டமானது சமுர்த்தி நன்மை பெறுபவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு திட்டமிடப்படவில்லை. எங்களது தேசிய ஒருங்கிணைப்பு குழுவில் பேசும் போது வறுமை கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் சமுர்த்தியில் புதிய பயனாளியாக சேர்ந்து கொண்டவர்களுக்கும் 500 ரூபாய் பங்குப்பணத்தினை செலுத்தி குழுவாக சேர்ந்தாலும் அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வரை இந்தக்கடனை வழங்க முடியும் என நாங்கள் அதில் சிபாரிசு செய்துள்ளோம்.

அது மட்டுமல்ல ஏற்கனவே 75,000 ரூபாய் அல்லது 80,000 ரூபாய் வரை கடன்களை பெற்று 20,000 ரூபாய் வரை மீள செலுத்தியிருந்தாலும் இந்த ஒரு இலட்சம் ரூபாய் கடனுக்கு அவர்கள் விண்ணப்பிக்க முடியும்.  அவர்களின் பழைய கடனை கழித்து மிகுதி தொகை வழங்கப்படும்.

கஷ்டப்படும் மக்களுக்கு இலகுவாக இந்த கடனை இலகுவாக பெற்றுக்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதனடிப்படையிலே சுற்று நிரூபங்களையும் வேலைத்திட்டங்களையும் நாங்கள் வழங்கியுள்ளோம்' என அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .