2025 மே 16, வெள்ளிக்கிழமை

பட்டிப்பளையில் ஆர்ப்பாட்டப் பேரணி

Suganthini Ratnam   / 2015 ஜூன் 17 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்,வா.கிருஸ்ணா 

மட்டக்களப்பு, பட்டிப்பளைப் பிரதேசத்தில் இறால் வளர்ப்புக்காக 94 ஏக்கர் சதுப்பு நிலத்தை  அரசியல்வாதிக்கு குத்தகைக்கு வழங்கவேண்டாம் என்று கூறி  பிரதேசவாசிகளினால்  இன்று புதன்கிழமை (17) ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

மகிழடித்தீவில்  இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்படுவதனால், அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அதனை தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டோர் கோரியுள்ளனர்.

இந்த  இறால் பண்ணையினால்  குடிநீர் உவர் நீராக மாற்றமடைந்து வருவதுடன்,  வேளாண்மை செய்கையாளர்களும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கால்நடை வளர்ப்பாளர்கள் இங்கு கால்நடைகளை வளர்க்கமுடியாத நிலையேற்பட்டுள்ளதுடன், தமது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த இறால் பண்ணை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் பிரதேச மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் அவற்றின் செயற்பாடு நிறுத்தப்பட்டிருந்ததாகவும் பின்னர், சிலர் தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதிப்பதற்காக இதனை பயன்படுத்திவருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த இறால் பண்ணை செயற்படுவதன் காரணமாக மகிழடித்தீவு, முதலைக்குடா, தாழையடித்தெரு, பண்டாரியாவெளி, படையாண்டவெளி மக்கள் குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.

மக்களின் இந்த கோரிக்கை நியாயமானது என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, இந்தப் பிரச்சினையை தீர்க்க உரியவர்கள் நடவடிக்கை  எடுக்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுத்தார்.

இதில் மகிழடித்தீவு, முதலைக்குடா, முனைக்காடு, தாளையடித்தெரு ஆகிய கிராம மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்;.

மகிழடித்தீவு சந்தியிலிருந்து ஆரம்பமான இப்பேரணி பட்டிப்பளை பிரதேச செயலகம்வரை சென்றது. பேரணியின் இறுதியில் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்திக்கும்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்; சுற்றாடல் அதிகார சபையினருக்கும் மகஜரை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .