2025 மே 16, வெள்ளிக்கிழமை

நாகர் கல்வெட்டு சாசனங்கள் கண்டுபிடிப்பு

Thipaan   / 2015 ஜூன் 20 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை விஷ்ணு ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நாகர் கல்வெட்டு சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆசிரியரான செல்வநாயகம் பத்மநாதனினால்; ஆலய முன்றலில் இருந்த இரு கருங்கற் தூண்கள் அரைவட்ட வடிவ கருங்கல்லிலும் எழுத்துக்கள் இருப்பதை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், வரலாற்றுத்துறைசார் பேராசிரியரும் யாழ். பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதனுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பேராசிரியர் கல்வெட்டினை ஆய்வு செய்து பின்வரும் விடயங்களை உறுதிப்படுத்தினார்.

ஆலய முன்றலில் காணப்பட்ட 5அடி 8அங்குலம் உடைய அரை வட்டக் கருங்கல்லை ஆய்வு செய்தபோது அதில் கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் பிராமிக் வரிவடிவம் காணப்பட்டது.

குறித்த கல்லில் குறிப்பிடப்படும் விடயமானது மணிநாகன் பள்ளி வேள்கண்ணன் என எழுதப்பட்டுள்ளது.

மணிநாகன் என்பது நாகர்களது வழிபாட்டு தெய்வமாகிய நாகதேவனை குறிப்பதாகும், மணிநாகன் பள்ளி என்பது நாகர்களது வழிபாட்டு தலம் என்பதாகும்.

மணிநாகன் பள்ளி வேள் கண்ணன் என்பது வேள் கண்ணன் எனும் நாகமன்னனால் அமைக்கப்பட்ட ஆலயம் என்பதாகும். வேள்கண்ணன் என்பது நாகரசனின் நாமம் ஆகும். வேள் என்பது அரசர்களுககு வழங்கும் சிறப்பு பட்டமாகும்.

இங்கு காணப்படும் அரைவட்ட கருங்கல்லானது நாகர்களது வழிபாட்டு தலத்துக்கு முன்பாக வைக்கப்படுவதாகும். இதில் அதிகளவில் நாக பந்தங்களின் உருவம் காணப்படுகின்றது.

இதேவேளை, கடந்த மாதங்களில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட கிடக்குழி, கல்லடிச்சேனை வேரம், பாலாமடு, பலாச்சோலை வில்லுத்தோட்டம், பாச்சேத்துக்குடா போன்ற இடங்களில் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியரும் யாழ். பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன், மேற்கொண்ட ஆய்வுகளில் பல்வேறுபட்ட நாகர் கால சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .