2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

24ஆவது வருட நினைவஞ்சலியை தடுக்க நீதிமன்ற தடையுத்தரவு கடிதம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பில் கடந்த 1990.09.21 அன்று இரவு நடைபெற்ற இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் 24ஆவது வருட ஞாபகார்த்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21) மாலை, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருனாகரம், ஞா.கிருஷ்ணபிள்ளை, மா.நடராசா, பி.இந்திரகுமார், கி.துரைராசசிங்கம், இ.இராஜேஸ்வரன் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

எனினும் நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி முடிவுறும் தருணத்தில்  அவ்விடத்துக்கு வருகைதந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.பி.வெதஹெதர மற்றும் பிரதேச பிரதிப் பொலிஸ் அதியட்சகர் காமினி எஹலவெல இந்நிகழ்வு நடைபெறக்கூடாது என்றும் அதற்கான தடை உத்தரவை நீதிமன்றத்திலிருந்து பெற்று வந்துள்ளோம் என்றும் தெரிவித்து, குறித்த தடை உத்தரவு கடித்தை அங்கு இருந்த அரசியல்வாதிகளிடம் கொடுத்தார்கள்.

பொலிஸார் கொடுத்த தடை உத்தரவு கடிதத்தை வாங்கிப்படித்த நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன்,
இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்யவில்லை. இந்த நபர் யார் என்பதே எமக்கு தெரியாது. இந்நிகழ்வை நாடாளுமன்ற உறுப்பினராகிய பாக்கியச்செல்வம் -அரியநேத்திரனாகிய நானே ஏற்பாடு செய்துள்ளேன்.

நாங்கள் எமது நிகழ்வை மக்களின் ஒத்துழைப்போடு நடாத்தி முடித்து விட்டோம். இந்நிகழ்வு முடிந்த பின்புதான் நீங்கள் இக்கடித்தைக் கொண்டு வந்துள்ளீர்கள்.

இது எங்கள் மண், எங்கள் தேசம். எமது இனத்தின் மீது கடந்த 1990.09.21 அன்று  நள்ளிரவு இனப்படுகொலை நடத்தப்பட்டது.

இதை நாங்கள் நினைவு கூறி அஞ்சலி செலுத்துகிறோம். மாறாக அரசியல் கூட்டமோ, அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடோ மேற்கொள்ளவில்லை. ஆகக் குறைந்தது இறந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் இந்த நாட்டில் தடை விதிக்கப்படுகின்றது. ஜனநாயகம், பொலிஸார் இவ்வாறான சம்பவங்களை வேண்டுமென்றே மேற்கொள்கின்றார்கள் என தெரிவித்தார்.

பின்னர் நினைவுத்தூபி அருகிலிருந்தவர்கள் கலந்து சென்றனர்.  பெருமளவு பொலிஸார் இவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்த போதிலும், மக்களும் அரசியல்வாதிகளும் கலைந்து சென்றதையடுத்து பொலிஸார் திரும்பிச் சென்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X