2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அகழ்வாராட்சி திட்டத்தை நிறுத்துமாறு மக்கள் போராட்டம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 28 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் நாசிவன் தீவு கிராமத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட இலங்கை மீன் பிடித்துறைக் முகங்கள் கூட்டுத்தாபணத்தின் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராட்சி திட்டத்தை நிறுத்துமாறு பிரதேச மக்கள், நேற்று (27) கவனயீர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

நாசீவன் தீவு கிராமத்தில் ஒன்றுகூடிய பிரதேச மக்கள் கைகளில் பாதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் தியாவட்டவான், ஓட்டமாவடி ஆகிய கிராமங்களை ஊடறுத்து சுமார் 8 கிலோமீற்றர் தூரம் நடந்து வாழைச்சேனையை வந்தடைந்தனர்.

“சிவன் தீவு மண் வளத்தை சுரண்டாதே”, “எமது வளம் எமக்கு வேண்டும்”, “சிவன் தீவு மக்களின் குடிநீரை உப்பு நீராக்காதே”, “மணல் மாபியாக்களை வெளியேற்று” போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.  

இவ்கவனயீர்ப்பு போராட்டம், காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக, கோறளைப்பற்று பிரதேச சபைக்கு முன்பாக மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக என பரவலாக மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர்களிடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை, பொதுமக்கள் கையளித்தனர். 

“சுற்றாடல் அதிகார சபை, புவிசரிதவியல் திணைக்களம், கரையோரம் பேணல் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் ஏணைய சம்பந்தப்பட்ட  அரச திணைக்களங்களின் அனுமதியுடன் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும். இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. சுற்றாடல் அதிகார சபைக்கு தெரியப்படுத்தி, அவர்கள் சென்று இன்று இந்நடவடிக்கையை நிறுத்தியுள்ளனர். இதேபோன்று ஏனைய திணைக்களங்களுக்கும் குறித்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளோம். 

“எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே செயற்படவேண்டுமே ஒழிய, மேலதிக செயற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளமுடியாது என மீன்பிடி துறைமுக முகாமையாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். பெரும்பாலும் அவர்கள் நாளை முதல் (இன்று 28) எதுவித முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளமாட்டார்கள். எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று மேற்படி அமைப்புக்களை அழைத்து கலந்துரையாடல் மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பேன்” என கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கோ.தணபாலசுந்தரம் இதன்போது தெரிவித்தார். 

இதேவேளை,  சம்பவத்தை கேள்வியுற்ற பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர்கள் போராட்ட இடத்துக்கு வருகை தந்து குறித்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாடினர்.

மேற்படி போராட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X