Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழ்கின்ற 10 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முஸ்லிம் பிரதிநிதிகளை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர்களாக நியமித்தமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த அரசாங்கம் ஆட்சி அமைப்பதற்காக த.தே.கூ. பெரும் பங்காற்றியுள்ள நிலையிலும், த.தே.கூ. பிரதிநிதிகளை இந்த அரசாங்கம் புறக்கணித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாதென கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான தமிழ் மக்களைக் கொண்ட பத்து பிரதேசங்களுக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பான கடிதங்கள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.
முஸ்லிம் பிரதேச செயலகங்களுக்கு பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர்களாக முஸ்லிம் அரசியல்வாதிகள் தலைவர்களாக நியமிக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.
நல்லாட்சி அரசாங்கம் என்று கூறுகின்ற இந்த அரசாங்கம், நல்லாட்சிக்கு எதிரான முறையில் தமிழ்ப் பிரதேச செயலகங்களுக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்தமைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இதை இடைநிறுத்துமாறு உரிய தலைவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.
'மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். ஆறு தமிழ் மாகாணசபை உறுப்பினர்களும் மூன்று முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர்களும் உள்ளனர்.
மாவட்ட அபிவிருத்திக்குழு தலைமைப் பதவியில் மூன்று முஸ்லிம்களும் ஒரு தமிழரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோன்று, தமிழர் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் அதன் தலைவர்களாக வந்துள்ளமையானது முற்றுமுழுதாக இந்த அரசாங்கம் த.தே.கூ. வை புறந்தள்ளுவதை காட்டுகின்றது.
இது தொடர்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளேன்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பிரதேச அபிவிருத்திக்குழு மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவியில் சமநிலை பேணப்பட்டது. தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்களுக்கு அன்று அரசாங்கத்தின் சார்பாக இருந்த தமிழ்ப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். அதேபோன்று மாவட்ட அபிவிருத்திக்குழுவிலும் முன்னாள் முதலமைச்சரும் பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக செயற்பட்டார். அதன் காரணமாக தமிழ் மக்கள் தமிழர்கள் உள்ளார்கள் என்ற திருப்தியில் இருந்தனர்.
எனவே, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமிழ் பிரதேச செயலகப் பிரிவுகளில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அபிவிருத்திக் குழுவின் தலைவர்களாக நியமிப்பதற்கும் மாவட்ட அபிவிருத்திக் குழுவில்; இன்னுமொரு உறுப்பினரை இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றேன்' எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago