2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அமிர்தலிங்கம் மேலும் சேவையாற்ற முன்வர வேண்டும்

Niroshini   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம்

சம்பூர் மக்கள் மீளக்குடியேறிவிட்டாலும் கூட அந்த மக்களுக்கான எல்லா வசதிகளும் முழுமையாக சென்றடையும் ஏது நிலை இன்னும் ஏற்படவில்லை. அதற்காக நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். ஆகவே, அந்த ஊரைச் சார்ந்த பேராசிரியர் அமிர்தலிங்கம்  தனது ஊருக்கும் இந்த மாவட்டத்துக்கும் மேலும் சேவையாற்ற முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

சம்பூரை பிறப்பிடமாகக் கொண்ட கொழும்பு பல்கலைக்கழக பொருளியில் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கத்தை பாராட்டும் நிகழ்வு, சம்பூர் மகா வித்தியாலய வெளியக சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை சூசையப்பர் கல்லுாரியில் சங்கத்தின் தலைவர் டொக்டர்  அ.சதீஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“இது வெறுமனே சம்பூருக்குரிய பெருமை மாத்திரமல்ல. திருகோணமலை அவரால் பெருமை பெறுகின்றது. எங்களுடைய பல்கலைக்கழகங்களிலும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் எங்களது பிரதேசத்தைச் சார்ந்த சிலர் சில உயர் நிலையில் இருக்கிறார்கள். ஆனாலும், ஒரு  பொருளியல் துறை பேராசிரியர் என்ற அந்தஸ்தில் வேறு யாரும் இருப்பதாக எனது நினைவுக்கு வரவில்லை.

அந்தளவில் பேராசிரியர் என்ற நிலையை எட்டி எங்கள் எல்லோருக்கும் பெருமை சேர்த்த அமிர்தலிங்கத்தை மிகவும் பாராட்டுகின்றேன். சம்பூர் பிரதேசத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று நாங்கள் பல்வேறுபட்ட உபாயங்களை நாங்கள் அரசியல் ரீதியாக மேற்கொண்டபோது, அமிர்தலிங்கம் சம்பூரைப் பற்றி எழுதிய பல சம்பவங்களை நான் எமது மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் மூலம் பெற்றிருந்தேன்.

தன்னுடைய ஊரை மதித்துக்கொண்டவர். கல்வியில் உயர்ந்து நிற்கின்றார். தன்னுடைய ஊருக்காகவும் திருகோணமலை மாவட்டத்துக்காகவும் அவர்  இதுவரை அளித்த பங்களிப்பைக் காட்டிலும் இனிமேலும் மிக அதிகளவிலான பங்களிப்பை நல்க முன்வரவேண்டும்.

அதற்கான தேவை தற்போது எழுந்துள்ளது. ஏனெனில், தற்போது தான்  சம்பூர் பிரதேசம் மீட்கப்பட்டு ஏறத்தாள ஒரு வருடமாகியுள்ளது. மக்கள் அங்கே குடியேறிவிட்டாலும் கூட, அவர்களுக்கான எல்லாவிதமான வசதிகளும் அங்கே அவர்களுக்கு இன்னும் கிடைக்கப் பெறவில்லை. அதற்கான ஏது நிலைகள் இன்னும் ஏற்படவில்லை. அது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றோம்” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X