2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

”ஆக்கிரமிப்பு இராணுவமே மாவீரர் துயிலும் இல்லங்களை சிதைக்காதே”

Editorial   / 2023 ஜனவரி 04 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

'ஆக்கிரமிப்பு இராணுவமே மாவீரர் துயிலும் இல்லங்களை சிதைக்காதே ஸ்ரீலங்கா இராணுவமே எமது மண்ணில் இருந்து வெளியேறு'  என்ற கோஷங்களை எழுப்பியவாறு குறித்த வாசகம் எழுதிய பதாதையை கையில் ஏந்தியவாறு மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கவனயீர்ப்பு போராட்டம் புதன்கிழமை (04) மேற்கொள்ளப்பட்டது.

கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ப.அரியநேத்திரன் ஞா.சிறிநேசன்,மாநகர மேயர் தி.சரவணபவன் செங்கலடி பிரதேச சபை தவிசாளர் சி.சர்வானந்தன் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் சி.வவானந்தன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் மாவட்ட பொறுப்பாளர் த.சுரேஸ் ஏற்பாட்டு குழுவின் உறுப்பினர்களான கு.வி.லவக்குமார் எஸ்.நிதர்சன் மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

துயிலும் இல்லத்துக்கு முன்பாக ஒன்று கூடியவர்கள்  “இராணுவமே வெளியேறு”, “துயிலும் இல்லங்களை அபகரிக்காதே”, “வன இலகா என்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பு செய்யாதே”, “மாவீரர்களை அவமதிக்காதே”, “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்”, “ரணில் அரசே பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டாதே”  போன்ற கோஷங்களை எழுப்பி   தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

 வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு வன பாதுகாப்பு திணைக்களம், “தொப்பிகல ஒதுக்கு காடு” என பெயர் பொறித்து துயிலும் இல்லத்தில் திடீரென நடப்பட்டதாக கூறப்படும் பெயர் பலகையையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கற்கலால் எறிந்து  சேதப்படுத்தி அப்பகுதியில் இருந்து பிடுங்கி அகற்றினர்.  அங்கு நடப்பட்டிருந்த மரக்கன்றுகளும் பிடுங்கப்பட்டன.

கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த நவம்பர் மாதம் 2022 ஆம் ஆண்டு 25 ஆம் 26 ஆம் திகதிகளில் மாவீரர் தினம் தொடர்பான பதாதை காட்சிப்படுத்தப்பட்ட போது  அவை கிழித்தெறியப்பட்டிருந்தன.

பின்னர்  குறித்த பிரதேசத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகளை அரச இராணுவ புலனாய்வாளர்கள் மேற்கொண்டாக தெரிவித்து தரவை ஏற்பாட்டுக் குழுவினருக்கும் புலனாய்வு பிரிவினருக்குமிடையில்  வாக்குவாதம் ஏற்பட்டது.

மரக்கன்றுகள் நடும் விடயத்திற்கும் தமக்கும் தொடர்பில்லையென வாழைச்சேனையில் அமைந்துள்ள வன இலகா தினைக்கள அதிகாரி தெரிவித்திருந்தார்.

தற்போது அதே இடத்தில் குறித்த திணைக்கள அமைச்சின் பெயர் தாங்கிய பெயர் பலகை இடப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக இரு சாராருக்கும் இடையில் மாறி மாறி சச்சரவுகள் இடம்பெறுவது தொடர் கதையாகவுள்ளது. மேற்படி விடயத்தினை கண்டித்தும் குறித்த செயற்பாட்டினை நிறுத்தி தருமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

எனவே மாவீரர் துயிலுமில்லங்களை ஆக்கிரமிப்பு செய்யும் செயற்பாடுகளை அரசாங்கம் கைவிடும் வரையில் அரசாங்கத்துடனனான பேச்சுவார்த்தைக்கு செல்வதில்லை என்ற தீர்மானத்தை தமிழ்க் கட்சிகள் எடுக்க வேண்டுமென  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X