2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரிய ஆலோசகர்களின் போராட்டத்துக்கு கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் ஆதரவு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 25 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஆசிரிய ஆலோசகர்கள் மேற்கொண்டுவரும் ஒத்துழையாமைப் போராட்டத்துக்கு கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் முழுமையான ஆதரவு வழங்குவதாக அதன் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'இலங்கை ஆசிரியர் சேவையில் இருந்துகொண்டு ஆசிரிய ஆலோசகர்களாகப் பணியாற்றும் ஆசிரியர்கள், புதிதாக ஆசிரியர் ஆலோசனைச் சேவையை உருவாக்கக் கோரி நாடளாவிய ரீதியில் 15.01.2016 முதல்; ஒத்துழையாமைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வித் திணைக்களத்துக்குச் செல்வதைத் தவிர்த்தல், ஆசிரியர் சேவை வழங்கும்போது வரவுப் பதிவேட்டில் கையொப்பமிடாதிருத்தல், கல்வித் திணைக்களத்தினால் முன்மொழியப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காதிருத்தல், ஆலோசனைகள் வழங்காதிருத்தல் போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
இதேவேளை, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் செயற்பாடுகளில் வழமைபோன்று அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆயினும், பாடசாலை வரவுப் பதிவேட்டில் கடமைக்கு வருவதையோ, கடமை முடிந்து செல்வதையோ அவர்கள் குறிப்பிட்டு கையெழுத்திடவில்லை.

மேலும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர்கள், அகில இலங்கை ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ள புதிதாக ஆசிரிய ஆலோசனைச் சேவையை உருவாக்கும் கோரிக்கைக்கு மேலதிகமாக மேலும் இரண்டு கோரி;க்கைகளை முன்வைத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரிய ஆலோசகர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும்; 1,500 ரூபாய் சேவைக் கொடுப்பனவு வடமாகாண ஆசிரிய ஆலோசகர்களுக்கு வழங்கப்படுவது போன்று 3,500 ரூபாயாக அதிகரித்து வழங்கப்பட வேண்டும். அத்துடன், வடமகாணத்தைப் போன்று கிழக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர்களுக்கும் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட வேண்டும் ஆகிய  கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். எனவே, மேலதிகமாக கிழக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர்கள் முன்வைத்துள்ள இரண்டு கோரிக்கைகளையும் நியாயமானதாகக் கருதி அதற்கும் பூரண ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X