2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இடைக்கால நிர்வாகம் தெரிவு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 நவம்பர் 07 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிர்வாகத்தினரது தொடர் குழப்பகரமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக, ஞாயிற்றுக்கிழமை (05) ஊர்ப் பொதுமக்கள் ஒன்றுகூடி, ஆலயத்தின் எதிர்கால நலன் மற்றும் சித்தாண்டி மக்களின் சமூகம் சார்ந்த நலனைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிர்வாக சபையை ஏகோபித்த ஆதரவுடன் தெரிவு செய்துள்ளனர்.

பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகள் பெறப்பட்டன் பின்னர் மக்களின் ஏகோபித்த முடிவாக, ஆலயத்தின் அனைத்துச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தற்காலிக உறுப்பினர்களாக 11 பேர் கொண்ட நிர்வாகக் குழுவினர் உட்பட அதனோடு சார்ந்து 20 பேர் கொண்ட அங்கத்துவ குழுவொன்றும் பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்டது.

இந்தக் குழுவினர், எதிர்வரும் புதன்கிழமை (08) செங்கலடி பிரதேச செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு, நீதிமன்றுக்கும் தங்களின் கருத்துகளை முன்வைக்கவுள்ளனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலய  நிருவாகக் கட்டமைப்பு குடிப்பரம்பரையை மையமாக கொண்டிருந்தவேளையில் கடந்த பல ஆண்டு காலமாக ஆலயத்தின் முக்கிய பொறுப்புக்களை வகிக்கும் குடிப்பரம்பரையினருக்குள் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அவர்கள் பலவாறாக பிரிந்திருந்த நிலையில் இப்புதிய இடைக்கால நிருவாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

பிரிந்திருந்த ஒவ்வொரு குடிப்பரம்பரையினரும் ஆலயத்தின் நிருவாக கட்டமைப்பை கைப்பற்ற முற்படுகின்றவேளையில் அவ்வப்போது ஆலயத்திற்குள்ளும் மற்றும் வெளியிலும் முரண்பாடுகள் ஏற்படும் சூழ்நிலை இருந்து வந்ததாகவும் இதன் காரணமாக அடிக்கடி பொலிஸ் நிலையம் மற்றும் நீதிமன்றம் சென்றதன் ஊடாக வழக்குகளும் இடம்பெற்றுவருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆலயத்தின் மகோற்சவ காலங்களில் அரங்கேறும் நிருவாகத்தின் குடிப்பரம்பரை மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றும் வன்முறையுடன்கூடிய அதிகார பரவலாக்கம் சூரன்போர் வரைக்கும் தொடர்ந்தும் காணப்பட்டதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஆலயத்தின் நிதிக் கையிருப்பில் பல இலட்சக் கணக்கான ரூபாய் பணம் முடங்கிக் கிடப்பதாகவும் இதுவரைக்கும் ஆலயத்தை காலா காலம் தங்கள் வசப்படுத்தி தற்போதுவரை நிருவாகத்தை கொண்டு நடாத்துக்கின்ற எவரும் தங்களின் இருப்பை ஆலய கர்த்தாக்கள் என தக்க வைக்க நினைக்கின்றார்களே தவிர ஆலயம் மற்றும் சித்தாண்டி ஊர்சார்ந்த சமூகம் சார்ந்த செயற்பாடுகளுக்கு இதுவரைக்கும் எவ்விதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளைம் மேற்கொள்ளவில்லையென புதிய நிருவாகப்  பொது அமர்வில் ஆலயத்தின் முன்றலில் வைத்து தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X