2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இரு சிறுமிகள் சித்திரவதை; சிறிய தந்தைக்கு மீண்டும் விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 17 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சகோதரிகளான சிறுமிகள் இருவரை சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட அச்சிறுமிகளின் சிறிய தந்தையை எதிர்வரும் 29ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில்  வசிக்கும் எட்டு மற்றும் பத்து வயதுகளையுடைய இச்சிறுமிகள் இருவரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளுக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது.  

இதனை அடுத்து, இச்சிறுமிகளின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள், சிறுமிகளைப் பரிசோதித்தபோது அவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமைக்கான உடற்தழும்புகள் காணப்பட்டன. இந்நிலையில், இச்சிறுமிகள் இருவரும் மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இச்சிறுமிகளின் சிறிய தாய் (வயது 48) கடந்த முதலாம் திகதி கைதுசெய்யப்பட்டு, அவருக்கு நான்கு மாதக் குழந்தை இருப்பதன் காரணமாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

இதனை அடுத்து,  சிறிய தாயின் கணவரான சிறிய தந்தை கடந்த கடந்த நான்காம் திகதி கைதுசெய்யப்பட்டு,  ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.தியாகேஸ்வரன் முன்னிலையில் கடந்த ஐந்தாம் திகதி ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, சந்தேக நபரை இம்மாதம் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இச்சந்தேக நபரை நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, அவருக்கு இந்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இச்சிறுமிகளின் தாய் வறுமை காரணமாக மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். இதேவேளை, தந்தை பொலன்னறுவையில் வசித்து வருகின்றார். இந்நிலையில், இச்சிறுமிகள் இருவரையும்  தனது தங்கையான சிறிய தாயிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X