2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘உறுகாமம் மீள் குடியேற்ற குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து தரப்பட வேண்டும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவிய வன்முறை காரணமாக, தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, தற்போது அங்கு மீண்டும் வாழ்ந்துவரும் மக்களுக்கு, மீள்குடியேற்றத்துக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென, ஏறாவூர் நகர சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வன்முறைகள் காரணமாக, 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில், அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர், தமது பழைய கிராமத்துக்கே திரும்பிச் சென்றுள்ள போதிலும், அடிப்படை வசதிகளின்றி அவதிப்படுகின்றனர் என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (02) கருத்துத் தெரிவித்த எம்.எஸ். சுபைர், இம்மக்களின் பிரச்சினை தொடர்பாக, பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும் அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும், வேண்டுகோள்களை ஏற்கெனவே முன்வைத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டிய கிராமங்களை விட்டு, முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அவற்றில் உறுகாமம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 70 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளனர் எனத் தெரிவித்த சுபைர், "ஆயினும், முழுமையான அரச பங்களிப்புடனான மீள்குடியேற்றம் அங்கு இடம்பெறவில்லை" என்று குறிப்பிட்டார்.

மீளக்குடியேறிய மக்களுக்கு, உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகளோ, போதிய வீட்டு வசதிகளோ, வாழ்வாதார உதவிகளை, இழப்பீடுகளோ எவையும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகமாகவே, அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர் எனத் தெரிவித்தார். "அரச அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், அரசியல் தலைமைகள், இன ஐக்கியத்துக்காகப் பாடுபடுவோர், மனித உரிமை அமைப்புகள் என அனைவரும், இதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்" என்று அவர் வேண்டினார்.

தமது கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், சுமார் கால் நூற்றாண்டு காலம் அகதிகளாகவே வாழ்ந்துவிட்டு, தாங்களாகவே மீளக்குடியமர்ந்துள்ள அவல நிலையை வெளிப்படுத்திய அவர், அவ்வாறான மக்களை மேலும் புறக்கணிக்கும் செயற்பாடுகள், நல்லிணக்கத்துக்கு நல்லவையல்ல எனத் தெரிவித்ததோடு, "வெளிப்படையான அநீதிகள் வேண்டுமென்றே இடம்பெறுவதற்கு, எவரும் இடமளிக்கக் கூடாது” என்றும் குறிப்பிட்டார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X