Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்,வா.கிருஸ்ணா
நல்லாட்சியிலும் தொடரும் மறைமுகமான ஊடக அடக்குமுறையைத் தடுத்துநிறுத்தி ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா ஜசாக்கிடம் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் விசேட அறிக்கையாளருக்கு புதன்கிழமை (19) கடிதம் அனுப்பியுள்ளதாக குறித்த ஒன்றியம் தெரிவித்தது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கையில் நல்லாட்சி ஏற்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தமும் தாக்குதல்களும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.
வடக்கு, கிழக்கிலுள்ள சிறுபான்மையின ஊடகவியலாளர்கள் இன்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கண்காணிக்கப்படுவதுடன், அவர்களுக்காகப் பணியாற்றவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அத்துடன், அரசாங்க அதிகார வர்க்கத்தின் அநீதியைக் வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதுடன், பொலிஸ் விசாரணை ஊடாகவும் இனந்தெரியாத நபர்களின் மூலமும் அச்சுறுத்தப்படுகின்றனர்.
மேலும், பெரும்பான்மையின ஊடகவியலாளர்களின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்கு எடுத்துள்ள நல்லாட்சி அரசாங்கமானது, இதுவரையில் சிறுபான்மையின ஊடகவியலாளர்களின்; படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணையை ஆரம்பிக்கவில்லை.
இலங்கையில் இதுவரையில் 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 பெரும்பான்மையின ஊடகவியலாளர்களும் 03 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.
1985ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் 2010ஆம் ஆண்டுவரை தொடர்ந்தவண்ணமே இருந்தது. நல்லாட்சி அரசாங்கமானது இதுவரையில் சிறுபான்மையின ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான விசாரணையில் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.
எனவே, படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட அனைத்து ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான விசாரணை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். அத்துடன், இலங்கையில் இன்றுவரை சுட்டுக்கொல்லப்பட்ட, காணாமல் போன சிறுபான்மையின ஊடகவியலாளர்களின் பெயர் விவரங்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட வேண்டும்.
நல்லாட்சியிலும் தொடரும் மறைமுகமான ஊடக அடக்குமுறையை தடுத்து நிறுத்தி ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது.
7 minute ago
7 minute ago
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
7 minute ago
13 minute ago
1 hours ago