2025 மே 22, வியாழக்கிழமை

‘ஊதியங்களுக்காக 16 பில்லியன் ரூபாய் செலவு’

வா.கிருஸ்ணா   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில், அரச ஊழியர்களின் ஊதியங்களுக்காக 16 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.

மட்டக்களப்ப கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பெண்கள் பாடசாலையான வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, நேற்று (19) மாலை நடைபெற்றது. இதன்போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலையின் அதிபர் திருமதி கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் கி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், விசேட அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.நிசாம், மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

“இந்த பாடசாலை, நீண்டகால வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டது.இந்த பாடசாலையின் முதல் அதிபராக இருந்த வின்சன்ட் அவர்களின் பெயர் இந்த பாடசாலைக்கு சூட்டப்பட்டது. இன்று இலங்கையில் முன்னணி பாடசாலைகளில் ஒன்றாக இது திகழ்கின்றது.

“இந்த நாட்டில் ஒருவரை ஒருவர் மதிக்கும் சூழல் ஏற்பட்டுவருகின்றது. அதற்கான நடவடிக்கைகளை இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வருகின்றார். இன்று, அனைத்து இனக்குழுமங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்தையும் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகச் செயற்பட்டு வருகின்றோம். ஒவ்வொருவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“கல்வி என்பது முக்கியமான பகுதியாக இன்று இருந்துவருகின்றது. கிழக்கு மாகாணத்தில் கல்வியை மேம்படுத்துவம் வகையில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளார். அதனைப்போன்று, கிழக்கு மாகாணத்தில் உள்ள நல்ல ஆளுமைமிக்க கல்வியமைச்சரைக் கொண்டுள்ளோம். கிழக்கு மாகாணத்தில் அனைவரும் இணைந்து கல்வியை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டுவருகின்றோம்.

“கிழக்கு மாகாணத்தில் 1170 பாடசாலைகள் உள்ளன. 30 தேசிய பாடசாலைகள் உள்ளன. கல்விக்காக அதிகளவான பணம் ஒதுக்கீடுசெய்யப்படுகின்றது. கிழக்கு மாகாண நிர்வாகத்தில் 40 ஆயிரம் அரச உத்தியோத்தர்கள் சேவையாற்றுகின்றனர். அதில் 20 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக உள்ளனர். கிழக்கு மாகாணசபையில் சம்பளம் வழங்குவதற்காக வருடாந்தம் 16 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்படுகின்றது. அவற்றில் 08 பில்லியன், பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படுகின்றது.

இவ்வளவு நிதியொதுக்கீடு செய்யப்படுகின்றபோதிலும், கல்வியின் வெளியீடு போதாத நிலையிலேயே இருக்கின்றது. இது தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் பணிப்பாளருடனும் கலந்துரையாடியுள்ளேன். அந்தவகையில், சிறந்த பெறுபேற்றை எமக்கு இந்த வின்சன்ட் தேசிய பாடசாலை பெற்றுத்தருகின்றது.

“ஆசிரியர்கள் மாணவர்களுடன் நேரத்தை செலவிட்டு, அவர்களிடம் உள்ள குறைபாடுகளை இனங்கண்டு, அதனை நிவர்த்திசெய்து, அந்த மாணவனை பலமானவராக மாற்றவேண்டும். இதன்மூலமே நாங்கள் கல்வியில் வளர்ச்சியை காணமுடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .