2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘எல்லா மக்களையும் தங்களுக்கு இணையாக நேசிக்கக்கூடிய தலைவர்கள் உருவாகட்டும்’

வா.கிருஸ்ணா   / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இந்த நாட்டில் உருவாக்கப்படுகின்ற எதிர்காலத் தலைவர்கள், இனவாதத்தை - மதவாதத்தை விரும்பாத, எல்லோரையும் தங்களுக்கு இணையாக நேசிக்கக்கூடிய தலைவர்களாக உருவாக்கப்படவேண்டும்” என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்  தெரிவித்தார்.

 

மக்களின் ஆணையை மீறி மாகாணசபைகளின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தான் தொடர்ந்து எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, நாவற்குடாவில் இன்று (24) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“இந்த நாடு சுதந்திரம் அடைந்த காலம்தொடக்கம் நாட்டை மாறிமாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் தங்களுக்கு இணையாக சிறுபான்மை சமூகத்தை நேசிக்கவில்லை, நேசிக்கத் தவறியுள்ளார்கள்.

“இந்த நாட்டில் அனைவரும் இனவாதம் உள்ளவர்கள் அல்லர். மதவாதமுள்ளவர்கள் அல்லர். மூவினங்களிலும் இனவாதத்தையும் மதவாதத்தையும் விரும்பாதவர்கள் உள்ளனர். ஆனால், பெரும்பான்மை சமூகத்துக்குத் தலைமைதாங்கிய தலைவர்களே, தாங்கள் அரசியல் செய்வதற்காக மக்கள் மத்தியில் இனவாத்தையும் மதவாதத்தையும் விதைத்து இந்த நாட்டை ஆட்சி செய்துவந்துள்ளனர்.

“அதன் காரணமாகவே, இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான தமிழ் சமூகம் காலணித்துவ ஆட்சியின் பின்னர் பல்வேறு இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துவந்துள்ளது. அதனை நாங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

“இந்த நாட்டில் ஏனைய மதங்களையும் தங்களது மதத்துக்கு இணையாக நேசிக்ககூடிய தலைவர்கள் யாரும் இந்த நாட்டில் இல்லையென்றே கூறவேண்டும்.

“அனைத்து மக்களையும் சமமாக பார்த்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற தலைவர்கள் உருவாக்கப்படவேண்டும்.

“இந்த ஜனநாயக நாட்டில், ஜனநாயகம் பேச்சளவில் இல்லாமல் நடைமுறையில் இருக்கவேண்டும் என்பதையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம்.

“மக்களால் வாக்களிக்கப்பட்டு தெரிவுசெய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள்,மக்கள் சம்மதம் கிடைக்கும் வரையில் நடத்தப்படும் ஆட்சிதான் உண்மையான ஜனநாயகம். கிழக்கு மாகாணசபையின் பதவிக்காலம் இந்த மாத இறுதியுடன் நிறைவுபெறுகின்றது. மக்கள் வழங்கிய ஆணை நிறைவுபெறுகின்றது.

“நிறைவுபெற்றால் மாகாணசபையைக் கலைத்துவிட்டு, தேர்தலுக்கு வரவேண்டும். மாகாணசபையின் ஆட்சிக்காலத்தை நீடிக்ககூடாது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் நான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றேன்.

ஆளுநர் என்பவர் மக்களால் தெரிவுசெய்யப்படாத ஒருவர். அரசாங்கத்தால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படும் ஒருவர். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் ஆளுநர் மாகாணத்தை நிர்வகிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. எந்த மாகாணசபை என்றாலும் அதன் பதவிக்காலம் முடிந்தால்தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும்.

“நல்ல விடயங்களை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால், மக்கள் ஆணைக்கு முரணான விடயங்களுக்கு எமது எதிர்ப்பைத் தெரிவிப்போம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .