2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஓரங்க நடிகன் கைதானார்

Editorial   / 2022 ஜூலை 28 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கனகராசா சரவணன்

விடுமுறைக்கு வீடு சென்று திரும்பிய விமானப்படைவீரர் ஒருவர், தன்னை தானே கடத்தி காட்டுப்பகுதியில்  கைகள், கால்கள் மற்றும் வாயை கட்டிக்கொண்டு நாடகமாடியுள்ள சம்பவம் இன்று (28) வியாழக்கிழமை   இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

 ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் செங்கல்வாடி ஒன்றுக்கு அருகில், உள்ளாடையுடன் ஆண்ணொருவர், மரத்தில் கட்டப்பட்டிருந்ததை, சோதனைச் சாவடியில்,  கடமையிலிருந்த பொலிஸார் கண்டுள்ளனர்.

“மரத்தில் முரட்டு அரசியலுக்காக உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகின்றார்கள்” என எழுதப்பட்ட வாசகம் அடங்கிய பதாகையையும் கண்டுள்ளனர். அதனையடுத்து, அவரை மீட்டு உடனடியாக  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்

அதன்பின்னர், விமானப்படை வீரரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதில், மட்டக்களப்பு விமானப்படை படை முகாமில் கடமையாற்றும் வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ரத்தினசூரிய முதியன்சலாவே  என்பவர் என தெரியவந்தது.

அவர், விடுமுறைக்காக வீடுச்சென்று, நேற்று (28)   மஹியங்கனையை வந்தடைந்துள்ளார்.  அங்கிருந்து பொலன்னறுவை பஸ்வண்டியில் பிரயாணித்து செவினப்பிட்டி மட்டக்களப்பு சந்தியை மாலை வந்தடைந்துள்ளார்.

அங்கிருந்து மட்டக்களப்பு செல்வதற்காக   காத்திருந்தபோது மனைவியுடன் கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன். எனினும்,  பின்னால் தனியார் வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாதோரால்  தனது தலையில் தாக்கி, தன்னுடைய முகத்தை மூடிவிட்டனர் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாகனத்தில் ஏற்றப்பட்டு, சுமார் 2 மணித்தியால பிரயாணத்தின் பின்னர் இவ்விடத்தில் கொண்டுவந்து, ஆடைகளை களைந்து, கட்டிவைத்துவிட்டு, அந்த பதாகையையும் வைத்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர் என அவர் வாக்குமூலமளித்துள்ளார்.

எனினும், அந்த விமானப்படை வீரரின் உடலில் எவ்விதமான அடிகாயங்களும் இல்லாததை தெரிந்துகொண்டு பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

 விசாரணையில் அவர் கையடக்க தொலைபேசியில் விளையாட்டு ஒன்றில் அதிக பணத்தை இழந்துள்ளதாகவும் முகாமில் சக படைவீரர்களிடம் கடனாக பணம் வாங்கி அதனையும் அந்த விளையாட்டில் இழந்ததையடுத்து கடனாளியாகியுள்ளார்.    

எனினும், கடன்காரரிடமிருந்து தப்பிக்கவே இவ்வாறு நாடகமாடினேன் என, அவர் பொலிஸாரிடம் ஒத்துக்கொண்டார். அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X