2025 மே 08, வியாழக்கிழமை

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக் கட்டடம் மீது குறை கூறல்

Princiya Dixci   / 2015 நவம்பர் 30 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக் கட்டடம் பிழையான இடத்தில் அமைந்திருப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்  பொறியியலாளாருமான சிப்லி பாறூக் தெரிவித்தார். 

குறித்த வைத்தியசாலை தொடர்பாக காத்தான்குடி மீடியா போரத்தின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற போதே மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.  

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக் கட்டடம், கடற்கரையை அண்மித்து ஒரு பிழையான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வைத்தியசாலைக் கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இங்குள்ள மின்விசிறி உட்பட பல உபகரணங்கள் துருப்பிடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

சுனாமி மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமாயின் பாதிக்கப்படுகின்றவர்களை இந்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாது. காரணம், மேற்படி அனர்த்தங்கள் ஏற்படுமாயின் முதலில் குறித்த வைத்தியசாலையிலுள்ள நோயாளர்களையும் அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களையும் தான் பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்படும். 

வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதுடன், ஆளணி வெற்றிடங்களும் நிரப்பப்படல் வேண்டும். மக்களின் நம்பிக்கைக்கு பொருத்தமானதொரு வைத்தியசாலையாக இது மாற்றப்படல் வேண்டும். 

அத்துடன், காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இகுவாக செல்லக்கூடிய பஸ் போக்குவரத்து அவசியம். இங்கு கடமையாற்றும் சில ஊழியர்கள் கூட பிரதான வீதியிலிருந்து வைத்தியசாலைக்கு செல்லும் போது முச்சக்கரவண்டியிலேயே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இவ்வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவாவது காத்தான்குடி பிரதான வீதியை அண்மித்து இருக்குமாயின் சிறந்ததாக இருக்கும். ஆனால், அதற்கான காணியொன்றையெடுப்பது மிகவும் கடினமாகும்.

வைத்திய அத்தியட்கர் டாக்டர் ஜாபீர் கடமையேற்றதிலிருந்து சீரான நிர்வாகம் இங்கு மேற்கொள்ளப்படுகின்றது.  இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்களும் அபிவிருத்திக்கு ஒத்தாசை வழங்கி வருகின்றனர். 

கடந்த காலத்தில் என்னாலான அனைத்து உதவியையும் ஒத்துழைப்புக்களையும் இந்த வைத்தியசாலைக்கு வழங்கி வருகின்றேன். அதேபோன்று எதிர்காலத்திலும் இங்கு காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்ய என்னாலான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்குவேன் என்றார்.

இதன்போது  காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் ஏ.எல்.டீன் பைறூஸ் மற்றும் செயலாளர் எம்.எச்.எம். அன்வர் உட்பட அதன் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X