2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காத்தான்குடி வாவிக்கரை எல்லை நிர்ணயத்துக்குக் கண்டனம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 08 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி வாவிக்கரை எல்லை நிர்ணயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு காத்தான்குடிப் பிரதேச செயலக அபிவிருத்திக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

காத்தான்குடிப் பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டம், அப்பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (07) நடைபெற்றபோதே, இது தொடர்பான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காத்தான்குடிப் பிரதேச செயலக அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கையில்,'மாவட்ட அபிவிருத்திக்குழுவின் கடந்த கூட்டத்தில் காத்தான்குடி வாவிக்கரை இருக்கின்ற இடத்திலிருந்து வீதியுடன் எல்லை இடப்பட வேண்டும் எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது. மாவட்ட அபிவிருத்திக்குழுவுக்கு காத்தான்குடி தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு அதிகாரம் இல்லை என்பதுடன், அப்பிரதேச செயலக அபிவிருத்திக்குழுவே தீர்மானம் எடுக்கவேண்டும்.  

காத்தான்குடி வாவிக்கரையை அளந்து எல்லை இடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது இந்நிலையில், வாவியின் எல்லையை நிர்ணயம் செய்யும்போது, வாவிக்கரை வீதியிலிருந்து 500 மீற்றர் உட்கொண்டுசென்று வாவிக்கரையில் அடையாளம் இடவேண்டும். இது தொடர்பான தீர்மானத்தை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு அறிவிக்குமாறு காத்தான்குடிப் பிரதேச செயலக அபிவிருத்திக்குழு தீர்மானித்துள்ளது' என்றார்.  

அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவிக்கையில்,'இந்த விவகாரம் சுற்றாடலுடன் சம்பந்தப்பட்டதுடன், இது தொடர்பில் குறித்த அதிகாரிகளுடன் கலந்துரையாடிச் செய்யப்பட வேண்டும்.

காத்தான்குடியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு இடம் இல்லாமையால் சிரமம் காணப்படுவதுடன், வாவிக்கரையோரத்தில்; குப்பைகளைக் கொட்டுவதால், சுகாதாரப் பிரச்சினையும் ஏற்படுகின்றது. ஆகவே, கொடுவாமடுப் பிரதேசத்தில் குப்பைகளைக்; கொட்டுவதற்காக அமைக்கப்பட்டுவரும் மீள்சுழற்சி நிலையத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றார்.

இவ்வாண்டு அபிவிருத்திக்குரிய நிதி இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்கிடையில் செலவழிக்கப்படல் வேண்டும்.

இந்த ஆண்டு அபிவிருத்தி திட்டத்திற்குரிய நிதி அடுத்த ஆண்டு வழங்கப்படமாட்டாது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகவும் கவனமாக இருக்கின்றார்.

பிரதேச ரீதியாக அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் முடிவடையாத வேலைகள் உடனடியாக நிறைவு செய்யப்படல் வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் வேலைத்திட்டங்களை பெற்றுள்ள ஒப்பந்தக்காரர்கள் மிக விரைவாக அந்த அபிவிருத்தி வேலைகளை நிறைவு செய்து அதற்கான பற்றுச் சீட்டுக்களை வழங்கி பணம் பெற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த 2017ஆம் ஆண்டு எக்காரணம் கொண்டு அந்த வேலைகளுக்கு பணம் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X