2025 மே 07, புதன்கிழமை

கி.மா. உறுப்பினர்களை புறக்கணிப்பதாகக் கூறி கடிதம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை மாகாண சபை முதலமைச்சர் புறக்கணித்து நடந்து வருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, 'கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் புறக்கணித்து வருகின்றார். கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு என்னைப் போன்ற சில கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை அழைக்க வேண்டாமென முதலமைச்சர் அந்த நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிடுகின்றார்.

நான் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்தபோது ஏறாவூர் வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தி அந்த வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி கட்டட நிர்மாணத்துக்காக  ஒன்பது மில்லியன் ரூபாய் நிதியை  ஒதுக்கியிருந்தேன். அந்த நிதியின் மூலம் குறித்த விடுதிக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வைத்தியசாலைக்கு அண்மையில் சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் அந்த விடுதிக் கட்டடத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தானே அதனை திறந்து வைக்க வேண்டுமெனவும் மாகாண சபை உறுப்பினரான என்னை அந்த வைபவத்திற்கு அழைக்க கூடாது எனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு பல வைபங்களுக்கு என்னைப் போன்ற மாகாண சபை உறுப்பினர்களை அழைக்க கூடாது என அவர் வலியுறுத்தி வருகின்றார்.

நான் கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூடடமைப்பின் உறுப்பினராக உள்ளேன். மேடையிலும் பொது வைபவங்களிலும் கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கம், நல்லாட்சி அரசாங்கம் என முழங்கித்திரியும் கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு நடந்து கொள்வதை ஜனாதிபதி என்ற வகையில் உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

ஜனாதிபதியான தங்களின் தலைமையில் நாட்டில் இன்று தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு நல்லாட்சி இடம்பெற்று வரும் நிலையில் கிழக்கு மாகாண சபையில் இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சரினால் நாங்கள் புறக்கணிக்கப்படுவதையிட்டு எமது கவலையை வெளியிடுகின்றேன். இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பீர்கள் எனவும் எதி;ர்பார்க்கின்றேன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X