2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கிழக்கு பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு எடுக்கப்படும்: அரசாங்கம் உறுதி

Gavitha   / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை, இரண்டு மாதங்களுக்குள் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள் வடகிழக்கு மாகாணங்களில் நியமனங்களை கோரி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 38ஆவது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்த்துவைக்கும் வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினர், வியாழக்கிழமை (30) மாலை, மட்டக்களப்புக்கு வருகைதந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

வேலையற்ற பட்டதாரிகளின் நிலைமைகள் தொடர்பில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரன், நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த அவசர பிரேரணையை அடுத்து, இந்க்த குழுவினை பிரதமர் அமைத்து அனுப்பிவைத்துள்ளார்.

இதன்போது, பட்டதாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட குறித்த குழுவினர், வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் என்று தெரிவித்ததுடன் அதற்காக இரண்டு மாத கால அவகாசத்தினையும் கோரியுள்ளனர்.

பல்வேறு கஷ்டங்களின் மத்தியில், கல்வியை கற்று பட்டங்களை பூர்த்திசெய்த மாணவர்கள், வீதிகளில் இருப்பதை அரசாங்கம் ஒருபோதும் பார்த்துக்கொண்டிருக்காது எனவும் அனைவருக்குமான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கும் எனவும் இதன்போது உறுதியளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மாரசிங்க தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞ.சிறிநேசன் ஆகியோர் கொண்ட நாடாளுமன்க்ற குழுவினரே மட்டக்களப்புக்கு வருகைதந்து பட்டதாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் காரணமாகவே,  இன்று பட்டதாரிகள் வீதியில் நிற்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் ஆனால், இந்த அரசாங்கம் எதிர்கால சந்ததியினரை கவனத்தில் கொண்டு சிறந்த கல்வி முறையை திட்டமிட்டு செயற்படுத்திவருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மாரசிங்க தெரிவித்தார்.

எனினும் தமது கோரிக்கைக்கு தீர்வினை எழுத்துமூலம் வழங்கும்போதே,  தம்மால் போராட்டம் தொடர்பில் மீள்பிரசீலனை செய்யப்படும் எனவும் அதுவரையில் தமதுபோராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.

இதுபோன்ற உறுதிமொழிகள் கடந்த காலத்தில் பல வழங்கப்பட்டபோதிலும், அவை நிறைவேற்றப்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .