2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கிழக்கு மாகாணத்தில் விஞ்ஞானத் தொழில்நுட்பப் பூங்கா; 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

Suganthini Ratnam   / 2016 மே 11 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்; முதலீட்டில் விஞ்ஞானத் தொழில்நுட்பப் பூங்காவை அமைக்கவுள்ளதுடன், இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என இம்மாகாணத்துக்கு வருகை தந்துள்ள இந்திய முதலீட்டாளரான ஏ.என்.பத்திரிநாத், இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், 'அண்மையில் கொழும்பில் நடைபெற்ற 'கிழக்கு முதலீடு-2016′ என்ற ஒன்றுகூடலைத் தொடர்ந்து  நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் இந்தப் பூங்காவை அமைக்கவுள்ளோம். இந்நிலையில், கிழக்கு மாகாண சபையின் 'கிழக்கின் முதலீடு' என்ற திட்டத்துக்கமைய இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

'இதனை நிறைவேற்றுவதற்கு மூன்று தொடக்கம் நான்கு வருடங்கள் தேவைப்படும். அவ்வாறு இதனை நிறைவேற்றும்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என்று  எதிர்பார்க்கின்றோம்.

மேலும், இங்கு தொழில்நுட்ப மையம் மட்டுமல்லாது, சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு அவற்றை விருத்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், இளைஞர், யுவதிகளின் தொழில்நுட்பத் திறனை விருத்தி செய்யும் வகையில் தொழில்நுட்பக் கல்லூரியையும் உருவாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இந்தக் கல்லூரியானது உள்ளூர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும் என்பதுடன், எதிர்காலத்தில் பொருளாதார அபிவிருத்திக்கும் உலகமயமாதலுக்கும் உதவியாக அமையும் என்று நம்புகின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இந்தத் தொழில்நுட்பப் பூங்காத் திட்டம் நிறைவேற்றப்படும்போது, அது கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையும்' எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X