ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வாகரையில் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைப் பின்பற்றுவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லாத பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக, 2 ஏக்கர் விஸ்தீரணமான அரச காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக, வாகரை உதவிப் பிரதேச செயலாளர் அருளானந்தம் அமலினி அறிவித்துள்ளார்.
இது விடயமாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பிரகாரம், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வாகரையில் கத்தோலிக்கர் சாரா வேறு கிறிஸ்தவர்களுக்கான மயானம் வழங்குதல் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வாகரைப் பொலிஸ் பொறுப்பதிகாரி, வாகரைப் பிரதேச சபைச் செயலாளர் மற்றும் மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்கள் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தீர்மானத்தின்படி, வாகரை வடக்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கணுக்காமடுப் பகுதியில் நாற்புறமும் அரச காணியாகக் காணப்படும் 2 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணி குடியேற்ற உத்தியோகத்தரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனவே, இக்காணியைத் துப்புரவு செய்து எல்லைகளைக் குறித்தொதுக்கி பெயர்ப் பலகை இடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த காணியை பிரதேச சபைக்குப் பராதீனப்படுத்துவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது விடயமாக கருத்துத் தெரிவித்த மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் செயற்பாட்டாளரும் கத்தோலிக்கருமான ரீ.ஜீ. குருகுலசிங்கம், “கடந்த சுமார் 40 வருடங்களாக வாகரையில் முனைப்புப் பெற்றுவந்த இந்த நெருக்கடிக்கு மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளின் கரிசனையின்பால் தீர்வு காணப்பட்டுள்ளது. மனித நேயத்தை விரும்பும் சகலருக்கும் கிடைத்த வெற்றியாகும், இது போன்றே ஏனைய மதவாத முரண்பாடுகளுக்கும் உடன்பாடுகளின் அடிப்படையில் தீர்வு எட்டப்பட வேண்டும்” என்றார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago